×

சென்னையில் பேனர் சரிந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு உதயநிதி ஆறுதல்

சென்னை: பள்ளிக்கரணையில் அதிமுக பேனர் சரிந்து விழுந்து உயிரிழந்த பெண் இன்ஜினியர் குடும்பத்துக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார். தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கீதா. இவர்களின் மகள் சுபஸ்ரீ (23). துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 12ம்தேதி மதியம் தனது ஸ்கூட்டியில் பள்ளிக்கரணை ரேடியல் சாலை வழியாக வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அப்பகுதியில் வைத்திருந்த அதிமுக பிரமுகர் இல்ல வரவேற்பு பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது சரிந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறி சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அந்த சமயத்தில் கோவிலம்பாக்கம் நோக்கி சென்ற தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறி, இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில் நேற்று காலை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுபஸ்ரீயின் வீட்டுக்கு நேரில் சென்று, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். உடன், காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் ஆலந்தூர் எம்எல்ஏவுமான தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, குரோம்பேட்டை காமராஜ் உடனிருந்தனர். பின்னர், நிருபர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “பேனர் விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. 3 ஆண்டுக்கு முன்பே பேனர் வைக்கக்கூடாது என திமுக வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக பிரமாண பத்திரமும் தாக்கல் செய்துள்ளோம். சுபஸ்ரீயின் பெற்றோர் இது போன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது என கூறியுள்ளனர். விபத்து ஏற்படும் வகையில் பேனர் வைத்தவர் தண்டிக்கப்படவேண்டும்” என்றார்.

Tags : Subhashree ,Subhasree ,Udayanidhi , Udayanidhi condolences, Subhasree family
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...