×

நல்லூர் டோல்பிளாசாவில் கவுன்டர்கள் இருந்தும் ஊழியர்கள் இல்லை: வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

புதுக்கோட்டை: காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் பகுதியில் அமைத்துள்ள டோல்பிளாசாவில் போதிய பணியாளர்கள் நியமிக்காததால் கட்டணம் செலுத்த வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவிக்கின்றனர். காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் பகுதியில் டோல்பிளாசா அமைக்கப்பட்டு உள்ளது. டோல்பிளாசாவில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு செல்லும் திசையில் நான்கு கவுன்டர்களும், திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்லும்போது நான்கு கவுன்டர்கள் என மொத்தம் 8 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் அனைத்து கவுன்டர்களிலும் பணியாளர்கள் அமர்ந்து கட்டணங்கள் வசூல் செய்தனர். தற்போது சுமார் 4 அல்லது 5 கவுன்டர்களின் தான் ஊழியர்கள் கட்டணங்கள் வசூல் செய்கின்றனர். மேலும் பணியாளர் இல்லாத கவுன்டர்களை தடுப்பு கட்டை (பேரிகார்டு) வைத்து அடைத்து வைத்து விடுகின்றனர்.

இதனால் அதிக வாகனங்கள் வரும்போது குறைந்த கவுன்டர்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் வாகன போக்குவரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அந்த நாட்களில் கூட அனைத்து கவுன்டர்களையும் திறப்பதில்லை. இதனால் அந்த நாட்களின் வழக்கத்தைவிட அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவர்களின் நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு செல்ல முடியாமல் உள்ளனர். குறிப்பாக டோல்பிளாசாவில் ஏற்படும் தாமதத்தால் தனியார் பேருந்துகளின் ஓட்டுனர்கள் அவர்கள் பணி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாததால் திட்டுவாங்கும் நிலமை ஏற்பட்டுள்ளது. எடுத்துகாட்டாக ஒரு தனியார் பேருந்து புதுக்கோட்டையில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு திருச்சியில் இரவு 9 மணிக்கு மீண்டும் புறப்பட வேண்டும் என்றால் இந்த இடைப்பட்ட நேரத்தில் திருச்சியை சென்றடைய வேண்டும். ஆனால் டோல்பிளாசாவில் ஏற்படும் தாமதத்தால் குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனால் அந்த பேருந்து புறப்பட வேண்டிய நேரத்தில் அப்போது தயாராக இருக்கும் வேறு பேருந்து புறப்பட்டு செல்கின்றது. இதனால் தனியார் பேருந்துகளின் ஒட்டுனர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். மேலும் புதுக்கோட்டையில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் திருச்சியில் இருந்துதான் வந்து செல்கின்றனர். இவர்கள் வரும் வாகனங்களும் டோல்பிளாசாவில் சிக்குவாதல் அவர்களும் தாமதமாக அலுவலத்திற்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி பல்வேறு தரப்பினரும் தாமதமாக செல்ல வேண்டிய நிலையை கட்டணம் வசூல் செய்யும் நிறுவனம் செயற்கையாக ஏற்படுத்தியுள்ளது. இதனை தவிர்க அனைத்து கவுன்டர்களிலும் பணியாளர்களை நியமித்து கட்டண வசூல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணிகள் முடிக்காமல் கட்டணம் வசூல்

ஒரு நெடுஞ்சாலையில் பயணிகள் அனைத்தும் முடிந்த பிறகுதான் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். ஆனால் காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் களமாவூர் பகுதியில் சாலையில் 40 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் நல்லூரில் டோல்பிளாசா அமைத்து தனியார் நிறுவனம் கட்டனம் வசூல் செய்வது எந்தவிதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை.

கண்டுகொள்ளாத போலீஸ்

நல்லூர் டோள்பிளாசா அருகே அவ்வப்போது போலீசார் வாகன சோதனை செய்கின்றனர். அப்போது சில கவுன்டர்கள் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கண்டும் காணாமல் போலீசார் இருந்து கொண்டு டாட்டா ஏசி, மணல் ஏற்றிவரும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : Nallur Dolphilasa ,Karaikudi ,Toll Plaza ,Pudukkottai , Pudukkottai, Karaikudi, Toll Plaza
× RELATED திருப்பதியில் 40 நாட்களுக்குப் பிறகு...