×

பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியும் அதிமுக பிரமுகரை கைது செய்ய போலீஸ் தயக்கம்: கண்ணாம்மூச்சி காட்டும் போலீசார்

சென்னை: திருமண வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கிய இளம்பெண் சுபஸ்ரீ இறந்து 5 நாட்கள் ஆகியும் அதிமுக பிரமுகர் இன்னும் கைது செய்யப்படவில்லை. சிறிய குற்றங்களில் ஈடுபடும்  குற்றவாளிகளை கைது செய்வதில் மும்முரம் காட்டும் போலீசார், சுபஸ்ரீ பலியான சம்பவத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்ட பின்னரும், குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அதிமுக பிரமுகரை கைது செய்யாமல் தயக்கம் காட்டி வருவது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் சுபஸ்ரீ(23), இன்ஜினியர். இவர், கடந்த 12ம் தேதி துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் ரேடியல் சாலையில் மதியம் 3 மணிக்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்தார். பள்ளிக்கரணை  அருகே வந்தபோது சென்டர் மீடியனில் வைக்கப்பட்டிருந்த திருமண வரவேற்பு பேனர் ஸ்கூட்டி மீது விழுந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி சுப மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.சுப மரணத்துக்கு, அதிமுக கட்சியினர் வைத்திருந்த வரவேற்பு பேனர்தான் காரணம் என்று கூறப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்தியதில், பள்ளிரக்கரணையை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், தனது மகன் திருமண  வரவேற்புக்காக முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்று ரேடியல் சாலை முழுவதும் அனுமதி பெறாமல் பேனர் வைத்திருந்தது தெரியவந்தது.

இது சம்பந்தமான வழக்கு கடந்த 13ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சென்னை மாநகராட்சி ஆணையர், போலீஸ் கமிஷனர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, போலீஸ் உயர் அதிகாரிகளை  நீதிமன்றத்துக்கே அழைத்து கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். அப்போது, “திருமண நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் நடைபெறும்போது பொதுமக்களுக்கு இடையூறாக பேனர், கட்அவுட் வைக்கக்கூடாது என பலமுறை  உத்தரவிட்டும் அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை. சுப போன்று இன்னும் எத்தனை உயிர்கள் உங்களுக்கு வேண்டும். இனியாவது அரசியல்வாதிகளுக்கு சாதகமாக நடந்து கொள்ளாமல், பொதுமக்களுக்காக பணியாற்றுங்கள்”  என்று கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அதிகாரிகளிடம் பிடித்தம் செய்து சுப குடும்பத்துக்கு முதல்கட்டமாக ₹5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் வருகிற 19ம் தேதி விசாரணைக்கு வருகிறது. நீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் வேகமாக செயல்பட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்தனர். சுபஸ்ரீ மீது மோதிய லாரி டிரைவர் மனோஜ் கைது செய்யப்பட்டார். பேனர் அச்சடித்து வழங்கிய கோவிலம்பாக்கம், விநாயகபுரத்தில் உள்ள அச்சக கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதேபோன்று, திருமண வரவேற்புக்காக அனுமதி பெறாமல் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை இந்த வழக்கில் பரங்கிமலை போக்குவரத்து போலீசார் 2வது குற்றவாளியாக அறிவித்துள்ளனர். ஆனால், விபத்து  நடந்து நேற்றுடன் 5 நாட்கள் முடிந்துவிட்டது. ஆனாலும் போலீசார் அவரை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கடந்த 4 நாட்களுக்கு முன் கூறினர். இதற்கிடையே, ஜெயகோபால் பள்ளிக்கரணையில்  ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. போலீசார் சென்றபோது, அங்கிருந்து அவர் தலைமறைவாகி விட்டார். இப்படி 5 நாட்களாக ஜெயகோபாலை போலீசார் கைது செய்யாமல் கண்ணாம்மூச்சி காட்டி  வருகிறார்கள்.

இதுகுறித்து பேனர் விழுந்து பலியான சுப பணியாற்றும் ஐடி கம்பெனியின் ஊழியர்கள் சிலர் கூறும்போது, “சென்னை முழுவதும் சாலைகளை ஆக்கிரமித்து பேனர் வைப்பதை ஆளுங்கட்சியினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். குறிப்பாக  துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் தினசரி பேனர் வைத்து சாலையை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். இந்த பேனர் கலாசாரத்தால் அநியாயமாக ஒரு இளம்பெண் பலியாகியுள்ளார். நீதிமன்றம் இவ்வளவு கண்டனம் தெரிவித்த பிறகும்  அனுமதி இல்லாமல் பேனர் வைத்த ஜெயகோபாலை போலீசார் கைது செய்யாமல் உள்ளனர். இதற்கு காரணம், கடந்த 12ம் தேதி அவரது இல்ல திருமணத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்து சென்றுள்ளார். இதனால்  அரசியல்வாதிகளுக்கு பயந்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.சாதாரண குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் பிடித்து, கை, கால்களை உடைக்கிறார்கள்.

இதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில், ஒரு  இளம்பெண் சாவுக்கு காரணமாக இருந்த குற்றவாளிகளை போலீசார் 5 நாட்களாக தனிப்படை அமைத்து தேடி வருகிறோம் என்பது நம்பும்படி இல்லை. இனியாவது போலீசார், பொதுமக்களின் நண்பன் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.  இதுபோன்ற உயிர்கள் பலியாகாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். ஜெயகோபால் பள்ளிக்கரணையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. போலீசார் சென்றபோது, அங்கிருந்து அவர் தலைமறைவாகி விட்டார்.

Tags : death ,Manoj Pillai ,Subhasree ,Subasree , Subasree's ,death, , Arrested PM, cops ,glasses
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...