×

மாணவர்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க அனைத்து பள்ளிகளில் சஞ்சாயிகா சேமிப்பு திட்டம் : மீண்டும் துவக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சென்னை: மாணவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், மீண்டும் அனைத்து பள்ளிகளிலும் சஞ்சாயிகா திட்டத்தை கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் சிறுசிறு தொகையை, சேமிப்பதற்கென்றே பள்ளிகளில், ‘’சஞ்சாயிகா’’ திட்டம் துவங்கப்பட்டது. பள்ளி குழந்தைகள் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த 22.6.1970 அன்று ‘’சஞ்சாயிகா’’ சேமிப்பு திட்டம் தபால்துறை மூலம் பள்ளிகளில் துவக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் சேரலாம். பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் ஒரு மாணவர் கூட்டாக சேர்ந்து தபால்துறையில் கணக்கு துவங்க வேண்டும். இந்த கணக்கு பள்ளியின் பெயரில் இருக்கும். மாணவனின் கணக்குகளை பள்ளி ஆசிரியர்கள் கவனித்துக் கொள்வார்கள். கையில் காசு கிடைக்கும் போதெல்லாம், ஆசிரியரிடம் கொடுத்து, தங்கள் பெயரில் வரவு வைத்துக் கொள்வார்கள். இதில், மாணவர்களுக்கு பாஸ்புக் வசதி வேறு.

இதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர், தினமும் சேரும் தொகையை, அருகிலுள்ள தபால் நிலையத்தில் மாணவர்கள் பெயரில் செலுத்தி விடுவார். சேமிப்புப் பணத்தை, ஆண்டு இறுதியிலோ அல்லது தேவைப்படும்போதோ எடுத்துக்கொள்ளலாம். இதற்கு, 3 சதவீத வட்டி கிடைக்கும். மாணவர்களால் மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்த இத்திட்டத்தினால், சிக்கனம், சேமிப்போடு சேர்ந்து நிர்வாகத் திறமையையும் மாணவர்களிடையே வளர்ந்தது. ஆனால் இன்று, ஆறாம் வகுப்பு படிக்கும் பையனுக்கு, ‘’சேவிங்ஸ் அக்கவுண்ட்’’ இருக்கிறதோ இல்லையோ, பேஸ்புக் அக்கவுண்ட் துவங்கியாகிவிட்டது. இப்படியொரு சூழலில், குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை விதைத்த, ‘’சஞ்சாயிகா’’ திட்டம், கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் முழுவதுமாக நிறுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசின் தபால்துறை வெளியிட்டது.மாணவரின் பெற்றோர் ஒருவர் கூறுகையில், ‘’நாங்கள் படிக்கும்போது உறவினர்கள் வந்து ஊர் திரும்பும்பொழுது, ஊர்க்காசு கொடுத்துச் செல்லும் பழக்கம் இருந்தது. இந்த காசை பத்திரப்படுத்தி ஆசிரியரிடம் கொடுத்து, ‘’சஞ்சாயிகா’’ அட்டையில் வரவு வைப்போம்.

இந்த சேமிப்பு தொகையை வைத்தே, சைக்கிளுக்கு காற்றடிப்பது, பஞ்சர் பார்ப்பது என்று அனைத்து தேவைகளும் பூர்த்தியாகிவிடும். இன்று என் வீட்டு பட்ஜெட்டை திறமையாக கையாளுகிறேன் என்றால், அன்று கிடைத்த சேமிப்பு பழக்கமே முக்கிய காரணம். ‘’சஞ்சாயிகா’’வின் இழப்பு இன்றைய தலைமுறையினருக்கு பேரிழப்பாகும்’’ என்றார். மாணவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை உருவாக்க சஞ்சாயிகா திட்டம் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சஞ்சாயிகா திட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது அனைத்து தரப்பினரிடமும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, அனைத்து பள்ளிகளிலும் மீண்டும் சஞ்சாயிகா திட்டத்தை கொண்டுவந்து, மாணவர்களிடம் சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடியோடு முடங்கி விட்டது

ஓய்வு பெற்ற தபால்துறை  அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘’அப்போது எல்லாம், 10 பைசா, 25 பைசாவுக்கு  ‘’சேவிங்ஸ் ஸ்டாம்ப்’’ கிடைக்கும். அந்த ஸ்டாம்புகளை சேகரித்து அட்டையில்  ஒட்டி, தபால் நிலையங்களில் கொடுத்து கணிசமான தொகையை மாணவர்கள் சேமித்து  வந்தனர். பின்னர், 1970ல் மத்திய அரசின் தேசிய சேமிப்பு நிறுவனம் மூலம்  பள்ளிகளில் ‘’சஞ்சாயிகா’’ திட்டம் துவங்கப்பட்டது. சேமிப்புக்கான  அடிப்படையை மாணவர்கள் வளரும் பருவத்திலே கற்றுக்கொள்ள இத்திட்டம் அரிய  வாய்ப்பாகவே இருந்தது. ஆனால், பல்வேறு கவர்ச்சிகர திட்டங்களால்,  ‘’சஞ்சாயிகா’’ திட்டம் அடியோடு முடங்கிவிட்டது. இந்த நூற்றாண்டு  துவக்கத்திலிருந்தே ஓரிரு பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகளில் இத்திட்டம்  செயலிழந்து விட்டது என்பதே உண்மை’’ என்றார்.

Tags : Resume Community Activists , Sanjayika Savings Scheme, all school, promote savings habit for students:
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...