×

கணக்குகளை தாக்கல் செய்யாத சங்கங்களை கண்டுகொள்ளாத அதிகாரிகளால் 2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு

சென்னை: கணக்குகளை தாக்கல் செய்யாத சங்கங்களை கண்டுகொள்ளாத அதிகாரிகளால் 2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி உரிய நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பத்திரபதிவுத்துறை மூலம் சொத்து, திருமண பதிவு மட்டுமின்றி, சீட்டு, சங்கங்கள் பதிவு செய்யப்படுகிறது. தற்போது வரை 1.97 லட்சம் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சங்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி இருக்க வேண்டும். ஒவ்வொரு சங்கமும் நிதியாண்டு முடிவடைந்த 6 மாதங்களுக்குள் பொதுக்குழுவில் தாக்கல் செய்த கணக்கு விவரங்களை மாவட்டபதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால், தற்போது வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சங்கங்கள் பல ஆண்டுகளாக கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட பதிவாளர்கள் தலைமையில் செயல்படும் சீட்டு, சங்கம் பிரிவினர் நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை. இதனால், சங்கங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பதிவுத்துறைக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக, சங்கங்கள் தங்களது கணக்குகளை தாக்கல் செய்யாத நிலையில், ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய சங்க கட்டணம் மற்றும் அபராத தொகையை சேர்த்தால் 2 ஆயிரம் கோடி வரை பதிவுத்துறைக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் பதிவுத்துறை ஐஜி பாலச்சந்திரன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், நிலுவை ஆவணங்களை பதிவு செய்து அதன் மூலம் வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சார்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் சங்கங்களை கணக்கு தாக்கல் செய்யாதவர்களை பிடித்து அபராதம் வசூலித்தால் பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று பதிவுத்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறும் போது, ‘3 ஆண்டுகள் சங்கங்ககள் கணக்கு தாக்கல் செய்யாத நிலையில் மாவட்ட பதிவாளர் நிலையிலும், 3 முதல் 5 ஆண்டுகளுக்கு இருப்பின் பதிவுத்துறை ஐஜியிடம் கணக்குகளை தாக்கல் செய்து உரிய அபராதம் கட்டி சங்கத்தை புதுப்பித்து கொள்ளலாம். ஆனால், கணக்குகளை தாக்கல் செய்யாத சங்கங்கள் எவை, எவை என்பது தொடர்பாக சீட்டு,சங்கம் பிரிவு ஆய்வு செய்து கண்டறியவில்லை.இதனால், தற்போது வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சங்கங்கள் செயல்படுகிறதா,இல்லையா என்பது தற்போது வரை தெரியவில்லை. இதனால், அந்த சங்கங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பெற முடியாத நிலை உள்ளது. இந்த விவகாரத்தில் பதிவுத்துறை ஐஜி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தால் கூடுதல் வருவாயை ஈட்ட முடியும்’ என்றார்.

Tags : associations , 2 thousand crore revenue loss ,authorities
× RELATED புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை...