×

திருவள்ளூர் கனிமவளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சென்னை: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, கனிம வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை 4 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நள்ளிரவுக்கு பிறகும் சோதனை தொடர்ந்தது. சோதனையில் போலி பில் புத்தகங்கள் உட்பட முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் மாவட்ட கனிமவளத் துறையில், புவியியல் மற்றும் சுரங்க அலுவலர் மற்றும் உதவி இயக்குனராக சீனிவாசராவ் உள்ளார். இவர் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாகவும், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க, அவர்களிடமிருந்து லஞ்சம் வாங்குவதாகவும் ஏற்கனவே பலமுறை புகார் எழுந்தது. மேலும், அலுவலகத்துக்கு வராமலேயே 10க்கும் மேற்பட்ட இடைத்தரகர்களை வைத்து, மணல் கடத்துபவர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அதோடு அரசால் தடை செய்யப்பட சிலிக்கான் மணலை லாரிகளில் கடத்தவும் துணைபோவதாக மணல் லாரி லாரி உரிமையாளர்களும் புகார் தெரிவித்து இருந்தனர்.

இவ்வாறு ஏராளமான புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வந்தது. இதையடுத்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி., சீனிவாச பெருமாள், டிஎஸ்பி சங்கர சுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் பிரேசில் தலைமையிலான 9 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று மாலை 4 மணியளவில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக முதல் மாடியில் உள்ள கனிமவளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்குள் புகுந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலக கதவுகளையும் உள்புறம் தாழிட்டு, ஊழியர்கள் யாரையும் வெளியே அனுப்பாமல் சோதனை நடந்தது. தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது முக்கிய ஆவணங்கள் மற்றும் போலி பில் புத்தகங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

மவுனம் சாதித்த கனிமவளத்துறை உதவி இயக்குனர்

மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சீனிவாசராவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால், அவர் வாயை திறந்து எதுவும் பேசாமல் மவுனம் சாதித்து வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் அவர்களுடன் இணைந்து சோதனை செய்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு துவங்கிய சோதனை தொடர்ந்து நள்ளிரவு வரை நீடித்தது.

Tags : Bribery Police Inspector ,Thiruvallur Mineral Resources ,Office ,Assistant Director , Assistant Director , Department of Mineral Resources , Tiruvallur,raided by the police
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...