×

உடைந்த மேற்கூரை... பழுதடைந்த உபகரணங்கள்... கழிவுநீர் தேக்கம்... பாதுகாப்பு, சுகாதாரம் இல்லாத அம்மா உணவகம்

திருவொற்றியூர்: மணலி மண்டலம் 20வது வார்டில் உள்ள அம்மா உணவகம் பாதுகாப்பற்ற மற்றும் சுகாதாரமின்றி செயல்படுவதால், பொதுமக்களின் வரத்து குறைந்து வருகிறது. சென்னை மாநகராட்சி, 2வது மண்டலம், 20வது வார்டுக்கு உட்பட்ட மணலி காமராஜர் சாலையில், புதிய மண்டல அலுவலகம் அருகே, அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள நலிவுற்ற தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் ஏராளமானோர் இங்கு மலிவு விலையில் உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.இந்நிலையில்,  இந்த அம்மா உணவகத்தை மாநகராட்சி வருவாய்த்துறை பிரிவு அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், உணவக கட்டிடத்தின் மேற்கூரை உடைந்து ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால்,  மழை பெய்யும்போது இந்த ஓட்டை வழியாக மழைநீர் கசிந்து, கிரைண்டர், மிக்சி மற்றும் உணவுப் பொருட்கள் மீது விழுகிறது. இதனால் மின் சாதன பொருட்கள் ஈரமாகி மின் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும்  காஸ் அடுப்பு முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால், அதன் மீது பாத்திரம் வைத்து சமைக்க முடியாத நிலை உள்ளது. காஸ் டியூப்  பழுதாகி இருப்பதால் காஸ் கசிந்து தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் குளிர்சாதன பெட்டி நீண்ட நாட்களாக பழுதாகி உள்ளது.

இதனால், உணவு பொருட்களை பாதுகாக்க முடியாமல் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமின்றி அம்மா உணவகத்தை சுற்றி எங்கு பார்த்தாலும் கழிவுநீர் தேங்கியுள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், உணவருந்த வரும் பொதுமக்கள் முகம் சுழித்தபடி சாப்பிடுகின்றனர். அடிப்படை வசதியின்றி,  பாதுகாப்பு இல்லாமல் செயல்படும் இந்த அம்மா உணவகத்தில் ஊழியர்கள் பீதியுடன் சமையல் வேலை செய்வதோடு, பொதுமக்களும் பயத்துடனே உணவருந்த வருகின்றனர். இதுகுறித்து மணலி மண்டல வருவாய்துறை பிரிவு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பொதுமக்களின் வருகை படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே மாநகராட்சி உயர் அதிகாரிகள் இங்கு ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : hygiene mom restaurant , Wrecked roof, damaged equipment ,sewage,safety, hygiene mom restaurant
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...