×

இபிஎஸ், 12 அமைச்சர்களை தொடர்ந்து ஓபிஎஸ் வெளிநாடு பயணம்: சீனா, இந்தோனேஷியா செல்கிறார்

சென்னை: இபிஎஸ் மற்றும் 12 அமைச்சர்களை தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வெளிநாடு செல்கிறார். வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 14 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தார். கடந்த 10ம்தேதி அவர் சென்னை திரும்பினார். அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் சென்றிருந்தனர்.இவர்களை தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டுக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரீஷியஸ் நாடுகளுக்கும் சென்று வந்தனர். தொடர்ந்து பல அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு சென்றனர். இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிங்கப்பூர், சீனா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், நகரமைப்பு திட்டமிடல், நகர்ப்புற வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உள்ளிட்ட துறைகளையும் கவனித்து வருகிறார். அந்த வகையில் வெளிநாட்டு யுக்திகளை பார்வையிட்டு மேற்கண்ட துறைகளை மேம்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக வெளிநாடு செல்கிறார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் வீட்டு வசதி கண்காட்சியை பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர். குறைந்த இடத்தில் அதிக வசதிகளுடன் கட்டிடங்களை கட்டுவது எப்படி, குடிசை மாற்று வாரிய வீடுகளை பொலிவுடன் அமைத்து கொடுப்பது எப்படி, நகர்ப்புற வளர்ச்சியை எவ்வாறு திட்டமிடுவது போன்றவற்றை கண்டறியவும் சீனா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். அடுத்த மாதம் 2வது வாரம் ஓ.பன்னீர்செல்வம் வெளிநாடு செல்லும் வகையில் அவரது சுற்றுப் பயணம் தயாராகி வருவதாக நிதித்துறை மற்றும் வீட்டு வசதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : OBS ,China ,Indonesia , EPS, 12 Ministers, OPS, Travel Abroad, China, Indonesia
× RELATED இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்