×

பத்திரங்களை பதிவு செய்யும் வெப்கேமரா ஆபரேட்டர்களுக்கு 3 மாத சம்பளம் பணம் நிலுவை: பணிக்கு வர மறுப்பு,..விரல்ரேகை, வீடியோ பதிவுக்கு ஆள் இல்லை

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் வெப்கேமரா ஆபரேட்டர்களுக்கு 3 மாதம் சம்பளம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர்கள் பணிக்கு வர மறுத்து விட்டதால் வீடியோ பதிவு மற்றும் விரல் ரேகை பதிவு செய்ய ஆள் இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் பத்திரப்பதிவின் போது ஆள்மாறாட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் பதிவுத்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில், ஒன்றாக ஒவ்வொரு பத்திரப்பதிவு நிகழ்வின் போதும் வெப்கேமரா வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. பின்னர் சிடியில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதற்காக, ₹50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு ரசீது தரப்படுகிறது.

இந்த பணிகள் அனைத்தும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்த நிறுவனம் சார்பில் வெப்கேமரா ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தான் பதிவுக்கு வருபவர்களின் விரல் ரேகையை பதிவு செய்கின்றனர். இதற்கிடையே, வெப்கேமரா ஆபரேட்டர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக பதிவுத்துறை ஐஜி அலுவலகத்துக்கு வெப் கேமரா ஆபரேட்டர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஐஜி அலுவலகம் உரிய உத்தரவு பிறப்பிக்கவில்லை. இதனால், வெப் கேமரா ஆபரேட்டர்கள் தற்போது வரை சம்பளம் கிடைக்காததால் பணிக்கு வர மறுத்து விட்டனர்.

இதன்காரணமாக தற்போது பதிவுக்கு வருபவர்களை கேமராவில் பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால், பொதுமக்களிடம் இருந்து வீடியோ பதிவுக்கட்டணம் மட்டும் 50 பெறப்படுகிறது. பத்திரப்பதிவு கேமராவில் பதிவு செய்யப்படாத நிலையில் ஆள்மாறாட்டம் பதிவுக்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் பதிவுத்துறை ஐஜி அலுவலகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சார்பதிவாளர்கள் சிலர் தெரிவித்தனர்.


Tags : webcam operators , Record securities, webcam operators, fingerprint, video recording
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...