×

மூணாறு அருகே நள்ளிரவில் ஜீப்பில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை

* கீழே விழுந்தது தெரியாமல் பெற்றோர் ஆழ்ந்த தூக்கம்
* உயிருடன் மீட்ட வனத்துறையினர்

மூணாறு: மூணாறு அருகே ஜீப்பில் இருந்து சாலையில் தவறி விழுந்த குழந்தையை, சிசிடிவி கேமரா பதிவு மூலம் கண்டறிந்த வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தை விழுந்தது கூட தெரியாமல் பெற்றோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கம்பிளிகண்டம் பகுதியை சேர்ந்த தம்பதி சதீஷ் - சத்தியபாமா. இவர்களது ஒரு வயது பெண் குழந்தை ரோஹிதா (எ) அம்மு. கடந்த 7ம் தேதி இவர்கள் ஜீப்பில் திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோயிலுக்கு சென்றனர். அங்கு தரிசனம் முடிந்து நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு புறப்பட்டனர். இரவு 10 மணியளவில் மூணாறு அருகே ராஜமலை ஐந்தாம் மைல் பகுதியில் உள்ள வளைவில் இவர்களது ஜீப் வேகமாக திரும்பிய போது, தாய் சத்தியபாமாவின் கையில் இருந்த குழந்தை தவறி, ஜீப்பில் இருந்து சாலையில் விழுந்தது.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் சத்தியபாமாவுக்கு குழந்தை விழுந்தது தெரியவில்லை. இரவு நேர கண்காணிப்பு பணியில் இருந்த வனத்துறை ஊழியர்கள், வாகனத்தில் இருந்து ஏதோ விழுவதை சிசிடிவி கேமராவில் பார்த்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு தலையில் அடிபட்ட நிலையில் குழந்தை ரோஹிதா கீழே விழுந்து கிடந்தது தெரிந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மூணாறு வனத்துறை கண்காணிப்பாளர் லட்சுமி மற்றும் மூணாறு குழந்தைகள் பாதுகாப்பு மைய ஊழியர் ஜோன்ஸ் எட்வின் ஆகியோர் வந்து, குழந்தையை மீட்டு மூணாறு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இரவு கம்பிளிகண்டத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற பின்னர், குழந்தை இல்லாததை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக வெள்ளத்தூவல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அவர்கள் மூணாறு காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதில், குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது தெரிந்தது.  இதையடுத்து அதிகாலை 3 மணியளவில் மூணாறு வந்த பெற்றோர்,  மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தையை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். அஜாக்கிரதையாக இருந்த பெற்றோரை கண்டித்த போலீசார், வனத்துறை அதிகாரிகள், குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags : adult child ,Munnar , Mooranaru, jeep, a slipping adult child
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு