×

பிறந்தநாளில் குளிக்கச் சென்றபோது சோகம் கடலில் மூழ்கிய 4 மாணவர்கள்: திருவொற்றியூரில் பரபரப்பு

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் கடலில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 4 பேர் கடல் அலையில் சிக்கி மூழ்கினர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இந்த சோகம் அரங்கேறி உள்ளது. மணலி பல்ஜிபாளையம் பகுதியை சேர்ந்தவர்  ராகேஷ் (15), பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று பிறந்தநாள். அதனால் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் 8 பேர்  ராகேஷ் வீட்டுக்கு நேற்று மதியம் வந்து  கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர்.
பின்னர் 8 மாணவர்களும் மணலியில் இருந்து சைக்கிளில் திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் அருகே  கடற்கரைக்கு வந்தனர். மணலி மாத்தூரை சேர்ந்த தனுஷ் (15), சின்ன சேக்காட்டை சேர்ந்த ஜெயபாரதி (15), தாமரை குளம் பகுதியை சேர்ந்த  கோகுல் நாத் (15), பெரிய தோப்பை சேர்ந்த  சுனில்குமார் (15) ஆகிய 4 மாணவர்கள் கடலில் இறங்கி குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். மற்ற மாணவர்கள் கரையில் அமர்ந்து  குளிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென்று கடலில் தோன்றிய ராட்சத அலை 4 மாணவர்களையும்  உள்ளே இழுத்துச் சென்றது.

இதனை பார்த்த மற்ற மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு  காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று  கூச்சலிட்டனர். அப்போது கடற்கரையில் மீன்பிடி வலைகளை சரிசெய்துகொண்டு இருந்த மீனவர்கள் உடனடியாக கடலுக்குள் இறங்கி  தேடினர். ஆனால்  மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.  தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோரும் உறவினர்களும் அப்பகுதிக்கு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். திருவொற்றியூர் போலீசாரும்  சம்பவ இடத்திற்கு வந்து பைபர் படகு மூலம் கடலுக்குள் சென்று தேடினர்.    இந்நிலையில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து மாணவர் தனுஷ் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. மற்ற 3 மாணவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில் தொடர்ந்து காணாமல் போன  மூன்று மாணவர்களையும்  தேடி வருகின்றனர். ஒரே பள்ளியில் படிக்கும் 4 மாணவர்கள் கடலில் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Tags : birthdays , The students, revisited, drowned
× RELATED நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்க்கு இது 126வது...