×

கர்நாடகா அணைகளில் 77,000 கனஅடி நீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடகாவின் கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு  வினாடிக்கு 77 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள கேஆர்எஸ்., கபினி,  ஹாரங்கி,  ஹேமாவதி அணைகளும் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக  முழுமையாக  நிரம்பின. இடையில் மழை நின்றிருந்தாலும் அணைகளுக்கு ஓரளவுக்கு   நீர்வரத்து  இருந்தது.இந்நிலையில், கடந்த 2 நாட்களாக கேரளாவின் வயநாடு   மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன்   காரணமாக, கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து  அதிகரித்துள்ளது. நதிகளிலும்  வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டுள்ளது.

நேற்று  மாலை நிலவரப்படி, கேஆர்எஸ்  அணைக்கு வினாடிக்கு 55,774 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில்  இருந்து 53,062 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 124.80 அடி  உயரம் கொண்ட  இந்த அணையில், 124.80 அடிக்கு  நீர் முழுமையாக நிரம்பியுள்ளது. அதே போல்,  2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி  2,283.23 அடி   நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து 27,432 கன அடியாக  உள்ள  நிலையில், அணையில் இருந்து  24,358 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு  வருகிறது.  இதன் காரணமாக, கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து நேற்று மாலை நிலவரப்படி  தமிழகத்துக்கு மொத்தம் 77  ஆயிரத்து 420  கனஅடி நீர் வந்து  கொண்டிருக்கிறது.

Tags : Karnataka , Karnataka, Dams, water opening
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...