×

பிரதமர் மோடியும் இஸ்ரோ குழுவும் இணைந்து ஒரு நாள் சாதிப்பார்கள்: பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வாழ்த்து

திம்பு: பிரதமர் மோடியும் இஸ்ரோ குழுவும் இணைந்து ஒரு நாள் சாதிப்பார்கள் பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 கலன்களை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவியது. நிலவின் மேற்பரப்பை சுற்றியவாறு ஆய்வு செய்யும் ஆர்பிட்டரும், தென் துருவத்தில் தரை இறங்க லேண்டர் கலனும், நிலவின் தரை பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ரோவர் கலனும் வடிவமைக்கப்பட்டது. இந்நிலையில், சுற்றுவட்டப்பாதையில் சரியாக சேர்ந்த விக்ரம் லேண்டர் விண்கலம், இன்று அதிகாலை நிலவில் தரையிறங்குவதென திட்டமிடப்பட்டிருந்தது. நிலவை நோக்கி பயணித்த லேண்டர், தரையிறங்க வெறும் 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, அதிலிருந்து சிக்னல் கிடைக்காமல் போனது.

விக்ரம் லேண்டரிலிருந்து எதிர்பார்த்தபடி சிக்னல் கிடைக்கவில்லை என்று, இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார். இதையடுத்து, பிரதமர் மோடி, கடைசிவரை போராடிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமானது அல்ல என்று கருத்து தெரிவித்தார். நிலவைத் தொடும் இந்தியாவின் முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும் எனவும் அவர் கூறினார். இந்நிலையில் பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், பிரதமர் மோடி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா மற்றும் அதன் விஞ்ஞானிகள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். சந்திரயான் 2 கடைசி நிமிடத்தில் சில சவால்களைக் கண்டது. ஆனால் உங்கள் தைரியமும் கடின உழைப்பும் வரலாற்றில் இடம்பெறும். பிரதமர் நரேந்திர மோடி பற்றி எனக்குத் தெரியும். அவரும் அவரது இஸ்ரோ குழுவும் இணைந்து ஒரு நாள் சாதிப்பார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.

Tags : Modi ,team ,ISRO ,Bhutan , PM Modi, ISRO, Bhutan Prime Minister, Lotte Schering, Chandrayan2
× RELATED கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின்...