*‘3வது முறையாக’ செயற்கை தீவு உல்லாச படகு திட்டம் பரிந்துரை
மதுரை : வண்டியூர் கண்மாய் நடுவில் செயற்கை தீவு அமைத்து, உல்லாச படகு, சிறுவர் ரயில் திட்டம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கும் திட்டம் 3 முறை உருவாகி கை கூடாமல் நிற்கிறது. மீண்டும் இந்த திட்டத்தை சுற்றுலாத்துறை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் வண்டியூர் கண்மாயை ‘மதுரை மெரீனா’ என அழைக்கும் வகையில் புதுப்பொலிவுடன் மாற்ற முடியும் என அதிகாரிகள் கருதுகிறார்கள். மதுரையில் 650 ஏக்கர் விரிந்து பரந்துள்ள வண்டியூர் கண்மாயில் நிரந்தரமாக தண்ணீர் தேங்கி நிற்கும் திட்டம் உருவாக்குவது, அதன் நடுவில் செயற்கை தீவு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைப்பது, கண்மாய் கரையில் இருந்து தீவுக்கு உல்லாச படகு, சுற்றிலும் அழகிய செயற்கை நீருற்று, இசை நீருற்று போன்றவற்றுடன் வண்ணமயமாக்கும் திட்டம் 1981ல் உலக தமிழ் மாநாடு நடக்கும்போது அரசு சுற்றுலா துறை சார்பில் உருவாக்கப்பட்டது.
முதற்கட்டமாக கண்மாய் கரையில் தற்போதுள்ள அழகிய பூங்கா உருவாக்கப்பட்டு, உல்லாச படகு போக்குவரத்தும் தொடங்கியது. ஆனால் நிரந்தரமாக தண்ணீர் தேக்கி, நடுவில் தீவு அமைக்கும் திட்டம் நிறைவேறவில்லை. அதோடு உல்லாச படகு திட்டம் சிறிது காலத்தில் உருக்குலைந்து போனது. இதன்பிறகு இதே திட்டத்தை 2009ல் சிங்கப்பூர் நிறுவனம் நிறைவேற்றி முடிக்க முன்வந்தது. இதற்கு மதுரை மாநகராட்சி ஒப்புதல் அளித்தது. இதற்காக கண்மாயின் வடக்கு கரையில் புதிய சாலையும் உருவானது. ஆனால் கடைசி நேரத்தில் கை நழுவியது.
இதையடுத்து 2013ம் ஆண்டு வண்டியூர் கண்மாய் தண்ணீருக்கு நடுவில் அமெரிக்காவில் சுதந்திரதேவி சிலைபோல் 160 அடி உயர தமிழ்தாய் சிலையும், சுற்றிலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களின் மாதிரி தோற்றம் உருவாக்கி, கண்மாய் கரையில் இருந்து மக்கள் உல்லாசமாக படகில் செல்லும் திட்டத்தை அரசு அறிவித்தது. ஆனால் மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தை விட உயரமான சிலை அமைப்பதில் ஏற்பட்ட வாஸ்து சிக்கலில் அரசு அந்த திட்டத்தை கைவிட்டது.
தற்போது மீண்டும் வண்டியூர் கண்மாயை சீரமைத்து செயற்கை தீவு, படகு பயணம், பூங்காவில் சிறுவர் ரயில் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உருவாக்கி, சுற்றுலா தலமாக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சென்னையில் மெரீனா கடற்கரை மாதிரியோ, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் பெரிய ஏரிகளை அழகுபடுத்தி சொர்க்க பூமியாக உருவாக்கி இருப்பது மாதிரியோ மதுரையில் வண்டியூர் கண்மாயை அழகுபடுத்தி உருவாக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் சுற்றுலா தலமாக்க முடியும். அதற்கான திட்டங்களை உருவாக்கி மத்திய, மாநில சுற்றுலாத்துறை மூலம் நிறைவேற்ற பரிந்துரை அனுப்பி உள்ளோம்’ என்றார்.
பூங்காவுக்கு கூடி கொண்டே போகும் கூட்டம்
வண்டியூர் கண்மாய் கரையில் அமைந்துள்ள பூங்கா புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இங்கு காலை, மாலை நேரங்களில் கூட்டம் அலைமோதுகிறது. நடையாளர் மட்டுமின்றி, ஸ்கேட்டிங், சிலம்பம் என சிறுவர், சிறுமிகளை கவரும் விளையாட்டு அம்சங்கள் அமைந்துள்ளன. பூங்காவில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. எனவே அச்சமின்றி இரவிலும் மக்கள் அதிகம் கூடுகிறார்கள். பூங்காவுக்கு வெளியே சாலை ஓரங்களில் உடல்நலனுக்கு உகந்த இயற்கை பானங்கள், மூலிகை சூப்கள், பயறு வகைகள் மட்டுமின்றி தள்ளுவண்டிகளில் பருத்தி பால், சுடச்சுட இட்லி, தோசை மலிவு விலையில் கிடைப்பது கூடுதல் சிறப்பாகும். இதனால் பூங்காவுக்கு வரும் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இணைப்பு சாலை என்னாச்சு?
வண்டியூர் கண்மாயின் 650 ஏக்கர் பரப்பில் 100 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பில் சிக்கியதை கழித்தால் 540 ஏக்கர் மிஞ்சி உள்ளது. இதில் தற்போதைய நிலையில் 80 மில்லியன் கன அடி நீர் மட்டுமே தேக்க முடிகிறது. 10 அடி உயரத்துக்கு மண் மூடி கிடக்கிறது. இதை முழுமையாக தூர்வாரி ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தினால் 250 மில்லியன் கன அடி நீர் தேக்க முடியும் என பொறியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். தற்போது தூர்வாரும் பணி ஓரளவுக்கு நடைபெற்று தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஏற்கனவே அமைக்கப்பட்ட படகு குழாம் சிதைந்து, அந்த பகுதியில் ஆகாய தாமரை மூழ்கி கிடக்கிறது.
கண்மாயை சுற்றிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை. ரிங்ரோட்டில் பாண்டி கோவில் அருகே ஐ.டி. பூங்கா முன் இருந்து, வண்டியூர் கண்மாய் கரை வழியாக மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் இணையும் 80 அடி அகல சாலை உருவாக்கப்பட்டு பாதியில் நிற்கிறது. இந்த திட்டம் நிறைவேறினால் போக்குவரத்து நெருக்கடி தீர ஒரு சாலை வசதி கிடைக்கும்.
