×

போரூர் - குன்றத்தூர் இடையே கிடப்பில் சாலை விரிவாக்க பணி: நெரிசல், விபத்துகள் அதிகரிப்பு

பல்லாவரம்:  சென்னை புறநகரில் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக போரூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகள் திகழ்கின்றன. நாள்தோறும் பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, மக்கள் குடியெறி வருகின்றனர். இதனால், சமீப காலமாக இப்பகுதியில் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்து வருகிறது. போரூர், குன்றத்தூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டுள்ளதால், வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போரூர் - குன்றத்தூர் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனகள் ஊர்ந்து செல்கின்றன.எனவே, இச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் இந்த சாலையை விரிவுப்படுத்த, அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகளும் தொடங்கியது. ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணிகள் முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சாலை விரிவாக்க பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், நெரிசல் ஏற்படுகிறது. பல இடங்களில் சாலையில் கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள், குறிப்பாக தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெண்கள், அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

கனரக வாகனங்கள் செல்லும்போது, அந்த இடமே புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், இருசக்கர  வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். அருகில் உள்ள வீடு மற்றும் கடைகளில் தூசு படிகிறது. கடைகளில் விற்பனைக்காக வைத்துள்ள பொருட்கள் நாசமடைகின்றன. தற்போது, வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்வதால், எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் குறித்த நேரத்தில், குறித்த இடத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலை பணி கிடப்பில் கிடப்பதை சுட்டிக் காட்டி, நடந்து முடிந்த சட்டப்பேரவையில், திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசன், போரூர் - குன்றத்தூர் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தார். அதன்பிறகு, ஒரு சில நாட்களாக மட்டும் நடைபெற்ற சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது மீண்டும் கிடப்பில் போட்டுள்ளது. இதனால், நாங்கள் தினமும் தவித்து வருகிறோம். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, கிடப்பில் போடப்பட்டுள்ள போரூர் - குன்றத்தூர் சாலை விரிவாக்கப் பணிகளை அரசு உடனடியாக முடிக்க வேண்டும்,’’ என்றனர்.



Tags : Road widening, work between, Porur , Kundathoor: congestion, increase , accidents
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...