×

பேம் இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 825 மின்சார பேருந்துகள்: மத்திய அரசு ஒப்புதல்

சென்னை: ‘பேம் இந்தியா திட்டத்தின்’ கீழ் தமிழகத்துக்கு 825 மின்சார பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து மின்சார பஸ்களை இயக்குவதற்கான திட்ட அறிக்கையினை மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் கோரியிருந்தது. இதில் 26 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து 14,988 பஸ்களை இயக்க விருப்பம் தெரிவித்தன. இதை பரிசீலித்த மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம், 64 நகரங்களுக்கு 5,095 பஸ்கள் இயக்க அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு பயன்படுத்த 400 மின்சார பஸ்களும், 100 மின்சார பஸ்கள் டெல்லி மெட்ரோவுக்கு 100 பஸ்கள் என மொத்தமாக 5,595 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்துக்கு கோவை-100, திருச்சி-100, மதுரை-100, ஈரோடு-50, திருப்பூர்-50, சேலம்- 50, வேலூர்-50, தஞ்சாவூர்-25 என மொத்தம் 525 மின்சார பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பஸ்களை 4 பில்லியன் கி.மீ தூரத்துக்கு ஒப்பந்த காலக்கட்டத்தில் இயக்க முடியும். 1.2 பில்லியன் லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும், 2.6 மில்லியன் டன் கார்பன்டை ஆக்ஸைடு வெளியிடுவது தடுக்கப்படும்’ என, கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது கட்டமாக சென்னைக்கு 300 மின்சார பஸ்கள் வழங்குவதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் தமிழகத்துக்கு மொத்தமாக 825 பஸ்கள் வழங்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Bam India Project, Tamil Nadu, Electric Buses, Central Government
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...