தேனி: பூம்..பூம் மாடுகளிடம் கேட்கும் குறியால் தோஷங்கள் நீங்கும் என்ற நம்பிக்கையால் தேனி மாவட்டத்தில் பூம், பூம் மாடு குறிசொல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எதிர்காலத்தை அறிந்து கொள்வதில் உள்ள ஆர்வம், காலத்தில் ஏற்படும் எதிர்மறை விளைவுகளில் இருந்து தப்பிக்க தேடும் வழிமுறைகள், எதிரிகள் மீது உள்ள நம்பிக்கையில்லா போக்கு போன்ற காரணங்களால் காலம், காலமாக ஜோதிடம், ஜாம கோடாங்கி, கிளி ஜோசியம், நாடி ஜோசியம் இவைகளின் மீது நம்பிக்கை பரிகாரம் செய்வது காலம், காலமாக நடந்து வருகிறது.
இதன் வழிமுறையில் பூம்..பூம் மாடு மூலம் குறி கேட்பதும் தமிழர் பண்பாடாக உள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பூம்...பூம் மாடுகளைக் கொண்டு குறி சொல்லி வருவது அதிகரித்துள்ளது. நேற்று தேனியில் மதுரை-கீரைத்துறையை சேர்ந்த பெரியசாமி என்பவர் இரு பூம்...பூம் மாடுகளுடன் தேனியில் குறிசொல்லிவிட்டு கால்நடையாக ஆண்டிபட்டிக்கு கிளம்பினார். இவரிடம் பூம்...பூம் மாடு குறித்து கேட்டபோது, மதுரை கீரைத்துறை பகுதியில் சக்கிமங்களத்தில் குடியிருந்து வருகிறோம். இந்து ஆதியன் பிரிவினரை சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகிறோம். சங்கரன்கோயில் பெருமாள் கோயிலுக்கு நேர்ந்த காளைமாடுகளை வளர்த்து வருகிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் புறப்பட்டு ஆறு மாதகாலம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பூம்...பூம் மாடுகளைக் கொண்டு நல் ஆசி வழங்கி வருகிறோம்.
இதில் பூம்...பூம் மாடு கண்ணத்தில் முத்தமிட்டால் குழந்தைகளுக்கான பாலதோஷம், பட்சி தோஷம் நீங்கும். வீடுகளின் படியேறினால் வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள் வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். தலையை ஆட்டி காலைத்தூக்கி ஆசிர்வதித்தால் தொட்டது துலங்கும். தொழில் லாபம் பெறும் என்ற ஐதீகம் உள்ளதால் மக்களிடையே பூம்...பூம் மாடுகளுக்கு கிராக்கி உள்ளது. இதில் மாடுகளுக்கு பக்தர்கள் தரும் காணிக்கையான நெல், அரிசி, பணம் ஆகியவை கொண்டு ஆறு மாதகாலம் சுற்றித்திரியும் நாங்கள் ஆறுமாத காலம் முடிந்ததும் சொந்த ஊருக்கு சென்று கூலி வேலைசெய்து கொள்வோம். ஊரில் உள்ள இரு ஆண்டுகளுக்கு இந்த பூம்..பூம் மாடுகளுக்கு எந்த உழைப்பும் தருவதில்லை’ என்றார்.
