*ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்
திருத்துறைப்பூண்டி : சென்னையிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடிக்கு பகல்நேர அந்தியோதயா ரயில் இயக்க வேண்டுமென உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில்வே உபயோகிப்பாளர் சங்க கூட்டம் பாரதமாதா சேவைசங்க கட்டிடத்தில் நடைபெற்றது. வக்கீல் நாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர் எடையூர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் ரயில் வந்து புறப்படும்போது ரயில்வே கேட் வெகுநேரம் மூடப்படுவதால் அந்நேரம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் காலை நேரம் என்பதால் வாகன நெருக்கடியால் போக்குவரத்து நெரிசலால் மாணவ, மாணவிகள், மருத்துவமனைகளுக்கு அவசரமாக செல்பவர்கள் மிகுந்த சிரமங்களை ஏற்படுத்துகிறது.
எனவே வரும் நிதியாண்டில் மேம்பாலம் கட்டுவதற்கு ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னை செல்வதற்கு ரயில் சேவை தொடங்கப்படவில்லை. சென்னைக்கு ரயிலில் செல்லவேண்டுமென்றால் பேருந்து பயணமாகத்தான் செல்லவேண்டி உள்ளது. இதனால் முதியோர்களும், மாற்றுத்திறானாளிகளும், குழந்தைகளும், கர்ப்பிணிதாய்மார்களும், நோயாளிகளும் பேருந்து பயணத்தில் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். எனவே நேரடியாக சென்னை செல்வதற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி ரயில் நிலையமானது பெரிய சந்திப்பு ரயில் நிலையம் ஆகும். இங்கு முன்பதிவு செய்வதற்கான கணினி வசதியினை உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும். இந்தியாவின் மிக தொன்மையான வேதாரண்யம் அகஸ்தியன்பள்ளி அகலரயில் பாதையினை விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். திருத்துறைப்பூண்டியிலிருந்து திருக்குவளை வழியாக நாகப்பட்டினத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வழித்தட பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்றுவருகிறது.இப்பணிகளை மேலும் துரிதப்படுத்தி ரயில் சேவையினை விரைந்து வழங்கிட வேண்டும். சென்னையிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடிக்கு பகல் நேரத்தில் இயங்கங்கூடிய அந்தியோதயா ரயில் சேவையினை பொதுமக்களின் நலன் கருதி இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்லும் ரயில் வழித்தடத்தில் உள்ள 72 கேட்டுகளிலும் கேட் கீப்பர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
கேட்கீப்பர்களை நியமிக்காமல் இருப்பதால்தான் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் ரயிலும் தடைபட்டுள்ளது. புதிதாக ரயில்களை இயக்க வேண்டும் என்றால் உரிய பணியாளர்களை உடனடியாக நியமித்து ரயில் சேவையினை தொடர்ந்து வழங்கிடவழிவகை செய்திட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணை செயலாளர் ஆசைத்தம்பி சரவணன் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், ராஜா, இசையரசன், பாபு, மணிமாறன், ராமன், பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொருளாளர் பிரபாகரன் நன்றிகூறினார்.
