×

குட்கா ஊழல் வழக்கில் கைதான 3 பேரின் ரூ.246 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்.....அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: குட்கா ஊழல் வழக்கில் கைதான  மாதவராவ், சீனிவாசராவிற்கு சொந்தமான ரூ.246 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவில் உள்ள 174 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கடந்த 2013-ல் இருந்து 2016 வரை தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்து ரூ.639 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக குற்றச்சாட்டு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூனில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதற்காக அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கிடைத்த தகவலின் பேரில் கடந்த 2016-ம் ஆண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதிபர் மாதவராவ் மற்றும் அவரது பங்கு தாரர்களுக்கு சொந்தமான குட்கா குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதற்காக யார், யாருக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்பது பற்றிய பட்டியல் இடம் பெற்றிருந்தது. இதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெற்றது.

குட்கா விவகாரத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பெயர்களும் வெளியில் தெரிய வந்தன. தமிழக அமைச்சர் ஒருவருக்கும், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் குட்கா ஊழலில் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலும் பரபரப்பை ஏற்படுத்தியது. குட்கா விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தமிழகத்தில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆண்டு குட்கா முறைகேடு தொடர்பாக அதிரடி சோதனை நடத்தினர். அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்ஸ்பெக்டர், உதவி கமி‌ஷனர், இணை கமி‌ஷனர், போலீஸ் கமி‌ஷனர், டி.ஜி.பி. என போலீஸ் அதிகாரிகள் பலருக்கு குட்கா ஊழலில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக வெளியான தகவலால் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது நடவடிக்கையும் மேற்கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை. ஆனால் இதுதொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குட்கா பங்குதாரர்கள் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குட்கா பங்கு தாரர்களுக்கு ரூ.246 கோடி சொத்துக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனையும் வழக்குடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குட்கா வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சி.பி.ஐ. அதிகாரிகள் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர். இதில் 3 அதிகாரிகளின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்தநிலையில் குட்கா பங்கு தாரர்களின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது. குட்கா வழக்கில் கைதான 3 பேரின் 174 அசையும், அசையா சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Kutka corruption, assets, freeze, enforcement
× RELATED மூன்று சக்கர வாகனம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தர்ணா