×

மருத்துவ முதுநிலை சேர்க்கை கவுன்சலிங் தேதியை நீட்டிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நிகர்நிலை பல்கலைக் கழகங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 603 முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் தேதியை நீட்டிக்க உச்ச நீதிமன்ற மறுத்து விட்டது. நாடு முழுவதும் உள்ள நிகர்நிலை பல்கலைகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 603 முதுநிலை படிப்புக்கான இடங்களை நிரப்புவதற்கு கவுன்சலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய கல்வி முன்னேற்ற சங்கம் என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கோடைகால அமர்வு நீதிபதிகள் தீபக் குப்தா, சூர்ய காந்த் அமர்வில் இந்த மனு நேற்று  விசாரணைக்கு வந்தது.

கவுன்சலிங் தேதியை நீட்டிக்கவில்லை என்றால், நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துவிடும். இதனால் மருத்துவக் கல்லூரிகள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும்’ என்று மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.  மேலும், கவுன்சலிங் தேதியை நீட்டித்தால்தான் காலியாக உள்ள இடங்களை நிரப்ப முடியும் என்றும் மனுவில் கூறப்பட்டது.  ஆனால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.



Tags : Medical Masters Admission, Counseling, Supreme Court
× RELATED சந்தோஷ்காளியில் ஆயுதங்கள்...