புழல்: சோழவரம் ஒன்றியம் திருநிலை ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் அரசு அனுமதி இல்லாமல் மணல் மற்றும் மண் எடுக்கப்பட்டதால் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு தற்போது ஏரி முழுவதுமாக வறண்டுள்ளது. மேலும் கரை இல்லாத பகுதிகளான பெருங்காவூர், மேட்டு காலனி பகுதிகளில் சுமார் 10 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரி மழைக்காலங்களில் நிரம்பியபோது திருநிலை, திருநிலைகாலனி, கோயில்மேடு, கவுண்டர்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 150 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களுக்கு ஏரியின் மூலம் விவசாயம் செய்து வந்தனர்.இந்நிலையில் கடும் வெயில் காரணமாக தற்போது இந்த ஏரி முற்றிலும் வறண்டு உள்ளது. மேலும், மழைநீர் ஏரிக்கு வரக்கூடிய கால்வாய்களை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வரத்து குறைந்தது.
இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து வருவதாலும், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். எனவே இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து ஏரி மற்றும் கால்வாய் ஆக்கிரப்புகளை அகற்றிடவும், இரவு நேரங்களில் மணல் எடுப்பதை தடுக்கவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் திருநிலை, கொடிப்பள்ளம், அருமந்தை, பெருங்காவூர், பூதூர், சோழவரம், ஆத்தூர், காரனோடை, நாரணம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அந்தந்த ஊராட்சிகளுக்கு சொந்தமாககுளங்களும் வறண்டு உள்ளது. எனவே இவற்றை தூர்வாரி கரைகளை சீரமைத்தால் மழைக்காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என்பதால் உடனே தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.