நாடாளுமன்றத்தில் எப்போதுமே தமிழை புறக்கணிக்கும் அதிமுக எம்பிக்கள்

புதுடெல்லி: அதிமுகவில் 37 எம்பிக்கள் வெற்றி பெற்றபோது, நாடாளுமன்றத்தில் வெறும் 7 அதிமுக எம்.பி.க்கள் மட்டுமே தமிழில் பதவியேற்றனர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் திமுக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே பதவியேற்றுள்ளது, அனைத்து மாநில எம்.பி.க்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் அபார வெற்றி பெற்றது. எம்பிக்கள் அனைவருமே திறமை வாய்ந்தவர்கள் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் குறிப்பாக திமுக எம்பிக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை நாடே எதிர்பார்த்து காத்திருந்தது.  நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி, இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் திமுக எம்.பி.க்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றனர். அதோடு, தமிழ் வாழ்க, பெரியார், கலைஞர் வாழ்க என்ற கோஷங்களையும் எழுப்பி, சபையை அதிர வைத்தனர்.

திமுக எம்பிக்கள் தமிழில் பதவி ஏற்று, தமிழ் வாழ்க என்று கோஷமிட்டது, உலக அளவில் டிரெண்டிங்கானது. இது உலக தமிழர்களை தமிழக எம்பிக்களை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது. திமுக கூட்டணி எம்பிக்களைத் தொடர்ந்து, அதிமுக.வின் ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் குமார் பதவியேற்றார். ஆனால், அவர் பதவியேற்புக்கு பின்பு ஜெய்ஹிந்த் என்று இந்தியில் முழங்கினார். இதற்கு முன்பு, கடந்த 2014ல் அதிமுக எம்.பி.க்கள் 37 பேர் பதவியேற்றனர். அப்போது வெறும் 7 பேர் மட்டுமே தமிழில் பதவியேற்றனர். மற்றவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில்தான் பதவி ஏற்றனர். ஆனால் 2009ம் ஆண்டு எம்பிக்கள் பதவி ஏற்பின்போது, திமுக கூட்டணியைச் சேர்ந்த 34 எம்பிக்கள் தமிழில் பதவி ஏற்றனர்.

இதனால், அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றபோது எல்லாம் தமிழை புறக்கணித்து வந்தது உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் திமுக அதிக இடத்தில் வென்றபோது எல்லாம் தமிழில் பதவி ஏற்று தங்களது தாய்மொழி பற்றை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர்.  இதேபோல், முன்னெப்போதும் இல்லாத வகையில், இம்முறை அனைத்து மாநில எம்.பி.க்களும் அதிகளவில் தங்கள் தாய்மொழியில் பதவியேற்றனர். மேலும், இம்முறை முதல் முறையாக இரண்டு எம்.பி.க்கள் நேபாள மொழியிலும் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. இம்முறை எம்.பி.க்கள் 20 மாநில மொழிகளில் பதவியேற்றனர்.

Tags : MPs ,AIADMK ,Parliament , Parliament, Tamil and AIADMK MPs
× RELATED மாநிலங்களவை எம்.பி. பதவியை...