×

கிருஷ்ணா நதிக்கரையோரம் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீட்டில் இருந்து சந்திரபாபு விரைவில் வெளியேற்றப்படுவார்: குண்டூர் எம்எல்ஏ பரபரப்பு பேட்டி

திருமலை: கிருஷ்ணா நதிக்கரையோரம் ஆக்கிரமித்து கட்டிய வீட்டில் இருந்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விரைவில் வெளியேற்றப்படுவார் என்று குண்டூர் எம்எல்ஏ ராமகிருஷ்ணா ரெட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2014ம் ஆண்டு ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு இரு மாநிலத்திற்கும் ஐதராபாத் ஒருங்கிணைந்த  தலைநகராக 10 ஆண்டுகள் செயல்படும் என பிரிவினைக்கான சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சந்திரபாபு நாயுடு அரசு பதவியேற்ற ஓராண்டிலேயே அரசு நிர்வாகம் அனைத்தையும் குண்டூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு அமராவதி தலைநகரை அமைத்து அங்கிருந்து ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார்.

அதற்காக குண்டூர் மாவட்டம், உண்டவள்ளியில் கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் உள்ள தனியார் வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு குடும்பத்தினருடன் குடியேறினார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சந்திரபாபு நாயுடு தங்கியுள்ள உண்டவல்லி வீடு கிருஷ்ணா நதிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாகவும் அங்கிருந்து உடனடியாக சந்திரபாபு நாயுடு வெளியேற்றப்படுவார் எனவும் குண்டூர் மாவட்டம் மங்களகிரி தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  விஜயவாடாவில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீட்டில் சந்திரபாபு நாயுடு கடந்த நான்கரை ஆண்டுகளாக வசித்து வருகிறார். சந்திரபாபு நாயுடு தனது ஆட்சியின்போது அமராவதி தலைநகரை அமைப்பதாக கூறி விவசாயிகளிடமிருந்து 34 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மட்டும் பெற்றுக் கொண்டார். சினிமா காட்சிகளை போல 3டி கிராபிக்ஸ் அனிமேஷன் படத்தை மட்டும் காண்பித்தார். ஆனால் அதற்கான பணிகளை ஒன்று கூட செய்யவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டோம் என்ற எண்ணத்திலேயே அவர் தங்குவதற்கு கூட அந்த இடத்தில் சொந்தமாக ஒரு வீடு  கட்டவில்லை. ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடா அடுத்த தாடேப்பள்ளியில் சொந்தமாக வீடு கட்டி ஆட்சிக்கு வந்த பிறகும் அதிகாரியுடன் வீட்டில் இருந்தபடியே  ஆலோசனை நடத்தி வந்தார்.

சந்திரபாபு நாயுடு ஊழல், முறைகேடுகளை மட்டுமே செய்ததால் மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டோம் என்ற எண்ணத்திலே சொந்தமாக ஒரு வீட்டை கூட கட்டவில்லை. கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீட்டில் அவர் இருந்து வந்தார். எனவே அந்த வீட்டில் இருந்து உடனடியாக சந்திரபாபு நாயுடுவை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் எனக்கு சிஆர்டிஏ தலைவராக பதவி வழங்கப்பட்டதாக வீண் வதந்தி வருகிறது. சிஆர்டிஏ தலைவர் பதவியை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூடுதலாக பார்த்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

ராமகிருஷ்ணர ரெட்டி, சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேசை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மங்களகிரி தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். ராமகிருஷ்ணாரெட்டி வெற்றி பெற்றால் கட்டாயம் அமைச்சர் ஆக்கப்படுவார் என ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்திருந்தார். ஆனால் புதிய அமைச்சரவையில் ராமகிருஷ்ண ரெட்டிக்கு ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சர் பதவி வழங்கவில்லை. இதனால் சிஆர்டிஏ தலைவராக அவருக்கு பதவி வழங்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கு உண்டான அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இந்நிலையில்  சந்திரபாபு நாயுடு கிருஷ்ணா நதிக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டில் இருந்து வெளியேற்றபடுவார் என ராமகிருஷ்ணா ரெட்டி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chandrababu ,house ,interview ,river ,Guntur MLA ,Krishna , Krishna Riverfront, Chandrababu, Guntur MLA
× RELATED யார் வந்தாலும் கூட்டணியில்...