குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி: மாநகராட்சி பெண் ஊழியருக்கு வலை

பெரம்பூர்: குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவான மாநகராட்சி பெண் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.பள்ளிக்கரணை விவேகானந்தா நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயன் (58). இவர், அன்னை கஸ்தூரிபாய் கட்டுமான தொழிலாளர் அமைப்பு சாரா சங்க தலைவர். இவருக்கு, கடந்த 2016ம் ஆண்டு கொருக்குப்பேட்டையை சேர்ந்த  சென்னை மாநகராட்சி ஊழியர் மஞ்சுளா (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது மஞ்சுளா, “எனக்கு குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை நன்கு தெரியும். குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் யாருக்கேனும் வீடு தேவைப்பட்டால் என்னிடம் சொல்லுங்கள். குறைந்த விலையில் வாங்கி தருகிறேன்,” என்று  விஜயனிடம் கூறியுள்ளார். இதை நம்பிய விஜயன், தனது சங்க உறுப்பினர்கள் மற்றும் பலரிடம் ₹30 லட்சம் வரை பெற்று மஞ்சுளாவிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய மஞ்சுளா, யாருக்கும் வீடு வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.  இதனால், பணம்  கொடுத்தவர்கள் அதை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்தாண்டு திருமங்கலம் மற்றும் பெரும்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் ஒரு சிலருக்கு வீடு ஒதுக்கி இருப்பதாக, விஜயனிடம் ஒதுக்கீடு ஆணைகளை மஞ்சுளா கொடுத்துள்ளார்.  மீதமுள்ளவர்களுக்கு சில நாட்களில் ஆணை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து விஜயன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தபோது, மஞ்சுளா கொடுத்தது போலி ஆணை என தெரியவந்தது. இதனால் மீண்டும் மஞ்சுளாவை சந்தித்து கேட்டபோது, முறையான பதில் கூறவில்லை என கூறப்படுகிறது. அவரது  செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசில் விஜயன் நேற்று புகார் செய்தார். போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மஞ்சுளாவை தேடி வருகின்றனர். இதுபோல் எத்தனை பேரை மஞ்சுளா ஏமாற்றியுள்ளார் எனவும் தீவிரமாக  விசாரித்து வருகின்றனர்.

× RELATED டிஜிட்டலில் வெளியான வசந்த மாளிகை