அண்ணாநகர்: நெற்குன்றம் பகுதியில் தறிகெட்டு ஓடிய லாரி, பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பயணிகள் மீது மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (51). இவரது மனைவி காளியம்மாள் (49). இவர்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டின் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அருகில், மேலும் சில பயணிகள் நின்றிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தம்பதி மற்றும் அருகில் நின்றிருந்த பாக்கியராஜ், தமிழ்செல்வம் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது.இதில், காளியம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். விஜயகுமார், பாக்கியராஜ், தமிழ்செல்வம் ஆகியோர் படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின்னர், காளியம்மாளை சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் விஜயபாலன் (35) என்பவரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மற்றொரு சம்பவம்:
தண்டையார்பேட்டை வஉசி நகர் 8வது தெருவை சேர்ந்தவர் கர்ணன் (38). இவர், நேற்று காலை தனது மகள் பவதாரணி (18) என்பவருடன் பைக்கில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தண்டையார்பேட்டை ஐஓசி நீரேற்று நிலையத்திற்கு சென்ற தண்ணீர் லாரி, தடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி பைக் மீது மோதியது. இதில், தந்தை, மகள் இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார், பவதாரணி மற்றும் கர்ணனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி பவதாரணி உயிரிழந்தார். கர்ணன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரவிக்குமார் (30) என்பவரை கைது செய்தனர்.