×

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற எடப்பாடியை ஓபிஎஸ் மகன் புறக்கணித்தார்: அமைச்சர் பதவியை தடுத்ததால் பழிவாங்கினாரா?

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்காமல் துணை முதல்வர் மகனும் எம்பியுமான ரவீந்திரநாத் குமார் புறக்கணித்தார். தனக்கு கிடைக்க வேண்டிய அமைச்சர் பதவியை தடுத்ததால் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடியை டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம், மாநிலங்களவை எம்பி விஜிலா சத்யானந்த் மற்றும் தம்பிதுரை உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். பின்னர், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் எடப்பாடி தங்கினார். அங்கும், தளவாய்சுந்தரம், தம்பிதுரை உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.வழக்கமாக, தமிழக முதல்வர் டெல்லி செல்லும்போது அதிமுகவை சேர்ந்த அனைத்து எம்பிக்களும் அவரை வரவேற்க விமான நிலையம் செல்வது வழக்கம். ஆனால், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக சார்பில் முதன்முறையாக தேனி தொகுதியில் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் டெல்லி விமான நிலையத்திற்கோ, தமிழ்நாடு இல்லத்துக்கோ சென்று முதல்வரை வரவேற்கவும் இல்லை, சந்திக்கவும் இல்லை.முதல்வர் எடப்பாடி நேற்று பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் உள்ளிட்டோரையும் சந்தித்தார். அப்போது, அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் உடன் செல்லவில்லை.

முதல்வர் எடப்பாடி டெல்லி வருவதை தெரிந்துகொண்டு, ஓ.பன்னீர்செல்வம் மகனும் அதிமுக எம்பியுமான ரவீந்திரநாத் குமார் திட்டமிட்டே சென்னையில் தங்கி விட்டதாக கூறப்படுகிறது. மேலும், முதல்வரை வரவேற்க டெல்லி செல்லாதது அதிமுகவில் எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் இடையே நடக்கும் பனிப்போர்தான் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “மத்திய அமைச்சரவையில் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், அதை எடப்பாடி அணியினர் வைத்திலிங்கத்துக்கும் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து தடுத்தனர். இதனால் அமைச்சர் வாய்ப்பு பறிபோய் விட்டது. இப்படி இருக்கும்போது எப்படி முதல்வரை வரவேற்க ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் செல்ல முடியும். அவருக்கு சென்னையில் முக்கியமான வேலை இருந்ததால் டெல்லி செல்ல முடியவில்லை. இன்று, டெல்லியில் அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் ரவீந்திரநாத் குமார் பங்கேற்பார். இதையடுத்து நாளை பாராளுமன்ற கூட்டம் தொடங்குகிறது. அந்த கூட்டத்திலும் பங்கேற்று, எம்பியாக பதவியேற்றுக்கொள்கிறார்” என்றார்.

Tags : Observer ,meeting ,Delhi , OPS son,ayog meeting, Revenge ,blocking ,ministerial post?
× RELATED பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு...