×

அடுத்த தலைமுறை போக்குவரத்துக்கான போட்டியில் பங்கேற்க அமெரிக்கா செல்லும் ஐஐடி மாணவர்கள்

சென்னை: அடுத்த தலைமுறை போக்குவரத்துக்கான போட்டியில் பங்கேற்க சென்னை ஐஐடி மாணவர்கள் குழு ஜூலை 21ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக ஐஐடி பேராசிரியர்கள் கூறினர்.இதுதொடர்பாக சென்னை ஐஐடி ஆராய்ச்சி குழு மாணவர்கள், ஏரோ ஸ்பேஸ் துறை பேராசிரியர் சக்ரவர்த்தி கூறியதாவது: அமெரிக்காவை சேர்ந்த ‘‘ஸ்பேஸ் எக்ஸ்’’ நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியில், அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்தை உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ‘‘ஹைப்பர் லூப்’’ எனப்படும் காற்று இல்லா  குழாயில் அதிவேக டியூப் வடிவ கலனில் பயணிக்கும் திட்டத்தை உருவாக்கி வருகிறது. அந்த திட்டத்தின்கீழ், உலக அளவிலான போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதில் கலந்து கொள்ள உலக பல்வேறு நாடுகளை சேர்ந்த பலர் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு போட்டிக்கு 1,600 குழுவினர் விண்ணப்பித்ததில், 52 குழுவினரின்  வடிவமைத்த டியூப் வடிவ கலன்கள் அங்கீகரிக்கப்பட்டது. அதில் 21 குழுவினரை போட்டிகளில் பங்கேற்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அழைத்துள்ளது. அதில் ஆசியாவில் இருந்து சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர் குழுவினர் மட்டுமே  தேர்வாகியுள்ளனர். இதற்காக சென்னை ஐஐடி மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர். அதன்பலனாக ஜூலை மாதம் 21ம் தேதி நம் மாணவர்கள் அமெரிக்காவில் நடைபெறும் போட்டியில் கலந்து  கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.  

இதைத்தொடர்ந்து ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் தொடர்பாக பேராசிரியர் சக்ரவர்த்தி கூறியதாவது:காற்றுடனான உராய்வு, புவிஈர்ப்பு விசை ஆகியவை ஒரு வாகனம் இயங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்த தலைமுறையினருக்கு போக்குவரத்து இந்த இரண்டையும் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம்  அதிகபட்சமாக மணிக்கு 1,000 முதல் 1,200 கி.மீ வேகத்தில் செல்லும். இது இலகு ரக விமானங்களை அதிகமாக வேகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஹைப்பர் லூப் போக்குவரத்து திட்டத்துக்கு செலவு அதிகம் ஏற்படும். காற்று இல்லாத குழாயில் டியூப் வடிவ கலன் இயங்கும். 15 மீட்டர் நீளம் கொண்ட கலன் உருவாக்கும் பட்சத்தில் 40 பேர் பயணிக்கலாம். சென்னையில் இருந்து 30  நிமிடங்களில் பெங்களூருக்கு செல்ல முடியும். இதற்கான பயணச் செலவு ₹1,500 வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகிறது.  எங்களின் ஆராய்ச்சி தொடர்பாக மத்திய அரசு ஆய்வு அறிக்கை சமர்பித்துள்ளோம். இவ்வாறு பேராசிரியர் சத்யமூர்த்தி கூறினார்.

Tags : IIT ,generation ,US , next generation, transportation, America, IIT students
× RELATED தேர்தலில் வாக்களித்தது புதிய...