×

விடிய விடிய நடந்த விசாரணை கோவையை சேர்ந்த மேலும் 3 வாலிபர்கள் கைது: தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு

கோவை: சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய மேலும் 3 பேர் கோவையில் சிக்கினர். இவர்களிடம் விடிய, விடிய விசாரணை நேற்று கைது செய்தனர்.  இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்த  குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தமிழகத்தில் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கடந்த மாதம் கோவையில் 3 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமையன்று கோவையை சேர்ந்தவர்களான முகமது அசாருதீன்(32), சதாம் உசேன்(26), அக்ரம் ஜிந்தா(26), அபுபக்கர் (29), இதயத்துல்லா(38), இப்ராஹீம் (28) ஆகியோரது வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் மொபைல் போன்கள், சிம்கார்டு, பென் டிரைவ், ஏர்கன் புல்லட் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதனை தொடர்ந்து முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் கேரள மாநிலம் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார். நேற்று முன்தினம் மாலை அவர் ெகாச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து முகமது அசாருதீன், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காக்கநாட்டிலுள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதனடிப்படையில், கோவை போலீசார், உக்கடம் அன்புநகரில் உள்ள ஷாஜகான், உக்கடம் வின்சென்ட் ரோட்டிலுள்ள முகமதுஉசைன், கரும்புக்கடையிலுள்ள ஷேக் ஷபியுல்லா ஆகிய 3 பேரின் வீட்டில் சோதனை நடத்தி விசாரித்தனர். சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக்’ மற்றும் சிரியா தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் இவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதன்பின், அவர்களது வீடுகளில் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், லேப்டாப், கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க்குகள், வங்கி கணக்கு ஆவணங்கள், பென் டிரைவ்கள், மெமரி கார்டுகள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர்.
 
 இதையடுத்து, 12ம் தேதி 3 பேர் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் சட்ட விரோத செயல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்தனர். பின்னர், கோவை போலீஸ் பயிற்சி வளாகத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்று நேற்று காலை வரையில் விசாரணை நடத்தினர்.  இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கைதான3 பேரின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். அதன்மூலம் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தனர்.

துறவிபோல வாழ்ந்த அசாருதீன்
கோவையை சேர்ந்த முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டதை அவர்கள் குடும்பத்தினர் ஒரு பொருட்டாக கருதவில்லை. எப்போதும் தனிமையில் இருக்கும் அவர் அந்த பகுதியினருக்கு ஒரு துறவி போல தென்பட்டுள்ளார். அவரது பின்னணியில் இத்தனை ரகசியமா? என ஆச்சரியப்படும் அந்த பகுதியினர், இதுபோன்று அவரை நாங்கள் பார்ப்போம் என எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.

போலீசார் கண்காணிப்பு
கைதான முகமது அசாருதீன் தொடங்கிய பேஸ்புக் அக்கவுண்டில் பலர் நண்பர்களாக சேர்ந்துள்ளனர். அவரது தலைமையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக கோவையில் செயல்பட்ட குழுவிலும் பல இளைஞர்கள் இருந்துள்ளனர். தற்போது ஷாகின் இப்ராஹிம், இதயத்துல்லா, அபுபக்கர், சதாம்உசேன், அக்ரம் ஜிந்தா மற்றும் கோவை போலீசாரிடம் சிக்கிய முகமதுஉசேன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய 9 பேரின் விவரம் தெரியவந்துள்ளது. மேலும் யாராவது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்களாக செயல்பட்டுள்ளனரா? என்று போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Tags : Vidya Vedi ,terrorist organizations , Coimbatore, 3 young people, arrested, terrorist organization
× RELATED 11 தீவிரவாத அமைப்புகளுக்கு இலங்கை தடை