×

நிலவில் நீர் இருப்பதை சந்திரயான்-2 உறுதி செய்யும்: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

சேலம்: நிலவில் நீர் இருப்பதை சந்திரயான்-2 உறுதி செய்யும் என்று முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். இந்தியா கடந்த 2008ம் ஆண்டு நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. அப்போது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து படம் எடுத்து அனுப்பியது. இதனால் ரூ.800 கோடி செலவில் அனுப்பப்பட்ட சந்திராயன்-1 திட்டம் வெற்றி பெற்றது. இதையடுத்து நிலாவை மேலும் ஆராய்ச்சி செய்ய சந்திராயன்-2 விண்கலம் திட்டத்துக்கு இஸ்ரோ முடிவு செய்தது. பல நூறு கோடி ரூபாய் செலவில் சந்திராயன்-2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின் மிக முக்கியமான திட்டமான சந்திரயான்-2 செயற்கைக்கோள் வரும் ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திராயன்-1 திட்ட இயக்குநரும், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை, நிலவிற்கு பல நாடுகள் செயற்கைக்கோளை அனுப்பி இருந்தாலும், சந்திராயன் மட்டுமே துல்லியமாக எங்கெங்கு நீர் உள்ளது என்பதை கண்டறிந்தது என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், சந்திராயன்-2 நிலவில் தரையிறங்கி நீர் இருப்பை உறுதி செய்யும். செப்டம்பர் 6ம் தேதி சந்திரயான்-2 நிலவில் இறங்கி பணிகளை தொடங்கும். நிலவிற்கு மனிதனை அனுப்பும் பணிகளுக்கான முன்னோட்டமாகவே இந்த சந்திரயான்-2 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, பின்னர் விண்கலத்தை ஓடுதளத்தில் இறக்க முயற்சி நடக்கிறது. விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் இதுவரை கடலில் இறக்கப்பட்டு வந்த நிலையில் ஓடுதளத்தில் இறக்க முயற்சி நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.



Tags : Annaiyarami Annadurai ,moon ,ISRO , Moon, Water, Chandraayan-2, Isro, Mayilasamy Annadurai
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...