×

மேட்டூரில் காவிரிநீர் ஒழுங்காற்று துணை குழு ஆய்வு

மேட்டூர்: காவிரி நீர் ஒழுங்காற்று துணை குழுவினர் நேற்று மேட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மூலம் அமைக்கப்பட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் வழிகாட்டுதலின்படி, துணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பாயும் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றத்தை கணக்கிட்டு, கணினி மூலம் உடனுக்குடன் கண்காணிக்க உதவும், தானியங்கி நீர் அளவீட்டு மானி பொருத்தும் திட்டம், செயல்படுத்தப்படவுள்ளது. இது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தரும் பணியில், துணைக்குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கர்நாடகம், தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் துணைக்குழுவினர் ஆய்வு நடத்த உள்ளனர். இந்த துணைக் குழுவினர், கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றப்படும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், தமிழக எல்லையில் மத்திய நீராணைய கட்டுப்பாட்டில் இருக்கும் பிலிகுண்டுலுவையும், தொப்பையாறு பகுதியையும் நேற்று ஆய்வு செய்த குழுவினர், பிற்பகலில் மேட்டூர் அணையை ஆய்வு செய்தனர். அப்போது, அணைக்கு நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றும் பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 
பின்னர், காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணைக்குழு கன்வீனர் மோகன்முரளி நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி ஆற்றுப்படுகையில் எந்தெந்த பகுதிகளில் தானியங்கி நீர் அளவீட்டு மானி பொருத்துவது என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், வரும் ஜூலை 31ம் தேதி ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இன்று முதல்  பவானிசாகர் அணை, அமராவதி அணை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு இடைப்பட்ட காவிரி ஆறு செல்லும் பகுதிகளில் 3 நாள்  ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு மோகன்முரளி கூறினார்.

Tags : Citizen Organizing Subcommittee ,Mettur , In Mettur, Cauvery, Ordinary Sub group
× RELATED மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு..!!