×

அலுவலக பணியில் பெண் நடத்துனர்கள்: எம்டிசி பஸ்களை இயக்குவதில் சிக்கல்?

சென்னை: அலுவலக பணியில் பெண் நடத்துனர்கள் பணியமர்த்தப்பட்டு வருவதால், பல வழித்தடங்களில் ‘எம்டிசி’ பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். சென்னை மாநகரப்போக்குவரத்துக்கழகம் (எம்டிசி) சார்பில் 34 பணிமனைகள் உள்ளன. இதன்மூலம் 3,400க்கும் மேற்பட்ட பஸ்கள், 600க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

இதில் பெண் நடத்துனர்களும் உள்ளடங்குவர். இந்நிலையில் எம்டிசிக்கு சொந்தமான அலுவலகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெண் நடத்துனர்களை அலுவலக பணிக்கு பயன்படுத்தப்படுவதால், பல்வேறு வழித்தடங்களில் பஸ்களை இயக்கமுடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது என தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:

எம்டிசியில் 30க்கும் மேற்பட்ட பெண் நடத்துனர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 10க்கும் மேற்பட்டோர் அலுவலக பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதைநாங்கள் தகவல்பெறும் உரிமைச்சட்டத்தில் கேட்டபோது தெரியவந்தது. இவ்வாறு நடத்துனர்கள் அலுவலக பணியில் ஈடுபடுத்தப்படுவதால், பல வழித்தடங்களில் பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சம்மந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்படும்’ என்றனர்.


Tags : conductors ,MTC , Office work, female conductors, MTC bus, problem in operation?
× RELATED வாக்களிப்பதற்கு எந்த வசதியும் செய்து...