×

சென்ட்ரல் ரயில் நிலையம் 1, 2வது நடைமேடை அருகே முறையான அறிவிப்பு இல்லாததால் காற்று வாங்கும் டிக்கெட் கவுன்டர்: பயணிகள் மூர்மார்க்கெட்டுக்கு படையெடுக்கும் அவலம்

சென்னை: சென்ட்ரல் ரயில்நிலைய 1, 2வது நடைமேடையில் முன்பதிவில்லா டிக்கெட் கவுன்டர் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் முறையான அறிவிப்பு இல்லாததல் பயணிகள் மூர்மார்க்கெட்டுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை, சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களான டெல்லி, மும்பை, ஆந்திரா, கேரளா, தெலங்கானா போன்ற பகுதிகளுக்கு தினசரி 20க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினசரி 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பயணம் செய்கின்றனர்.

இவர்களில் பலர் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்று ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் அவசர வேலைக்காக மற்றும் பிற வேலைக்காக திடீர் பயணம் மேற்கொள்பவர்கள், வடமாநிலத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், ஊருக்கு செல்பவர்களில் பலர் ரயில் நிலையத்திற்கு வந்து டிக்கெட் எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு டிக்கெட் எடுப்பவர்கள் மூர்மார்க்கெட் வளாகத்தில் உள்ள முன்பதிவில்லா டிக்கெட் கவுன்டரில் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து ரயிலை பிடித்து பயணித்து வந்தனர். இவ்வாறு டிக்கெட் வாங்குவதற்கு அலைவதால், தாங்கள் செல்ல வேண்டிய ரயில்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இப்பிரச்னைக்கு தீர்வாக, சென்ட்ரல் ரயில் நிலையம் 1, 2வது நடைமேடை வால்டாக்ஸ் சாலையில் கடந்த மாதம் முன்பதிவில்லா டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டது. அதாவது வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் இந்த டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் எடுத்து தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல வசதியாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த முன்பதிவில்லா டிக்கெட் கவுன்டர் குறித்து முறையான அறிவிப்பு மற்றும் அறிவிப்பு பலகை இல்லாததால், ஒரு மாதம் ஆகியும் பயணிகள் அப்படியொரு டிக்கெட் கவுன்டர் இருப்பது தெரியாமல் வழக்கம் போல் மூர்மார்க்கெட்டில் உள்ள டிக்கெட் கவுன்டருக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி வருகின்றனர். எனவே சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு முன்பதிவில்லா டிக்கெட் கவுன்டர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ரயில் பயணி ஒருவர் கூறுகையில், ‘‘வெளி ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் மூர்மார்க்கெட்டில் உள்ள முன்பதிவில்லா டிக்கெட் கவுன்டருக்கு சென்று வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து ரயில்வதை வழக்கமாக  கொண்டிருந்தேன். அதன்படி நேற்று பேருந்தில் இருந்து இறங்கி டிக்கெட் எடுப்பதற்காக மூர்மார்க்கெட் சென்றபோது சென்ட்ரல் ரயில் நிலையம் 1, 2வது நடைமேடை அருகே முன்பதிவில்லா டிக்கெட் கவுன்டர் என்ற பலகை இருப்பதை கண்டு சந்தேகத்தின் அடிப்படையில் சென்று கேட்ட போது டிக்கெட் வழங்கினர்.

இதனால் மூர்மார்க்கெட்டுக்கு செல்லாமல் இங்கேயே டிக்கெட் வாங்கினேன். மேலும் இங்கு புதிதாக முன்பதிவில்லா டிக்கெட் கவுன்டர் திறந்திருப்பது மக்களுக்கு தெரியாததால் இங்கிருந்து மூர்மார்க்கெட்டில் உள்ள டிக்கெட் கவுன்டருக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து ரயிலை பிடிக்க வேகமாக ஓடி வருகின்றனர். எனவே வெளி ஊர்களான கோவை, சேலம், ஈரோடு மற்றும் வடமாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மும்பை, பெங்களூர், டெல்லி போன்ற மாநிலங்களுக்கு முன்பதிவில்லா டிக்கெட் கிடைக்கும் என்று மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பெயர் பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Air Strike ,Passenger Moormarket Invasion , Central Railway Station, 1st, 2nd Platform, Announcement, Air Purchase, Ticket Counter
× RELATED சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை...