×

பிஷப் தங்கும் விடுதியில் இயேசு சிலைகளை அகற்ற கோரிக்கை பா.ஜ., இந்து அமைப்பினர் விடிய, விடிய உள்ளிருப்பு போராட்டம்

சூலூர்: சூலூர் கண்ணம்பாளையத்தில் கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் பிஷப் தங்கும் விடுதி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள இயேசு சிலைகளை அகற்ற கோரி பாஜ, விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட 5 அமைப்பினர் சூலூர் தாசில்தார் அலுவலகத்தில் விடிய, விடிய உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவு கண்ணம்பாளையம் ராமையாநகர் பகுதியில் மலபார் கிறிஸ்டியன் அசோசியேஷன் சார்பில் சுமார் 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிஷப் தங்கும் விடுதி கட்டியுள்ளனர். கட்டடத்தின் முகப்பில் 2 இடத்தில் 15 அடி உயரத்தில் 2 இயேசுவின் முழு உருவ சிலை அமைத்துள்ளனர்.  பணிகள் முடிந்து கடந்த முதல் தேதி அமைச்சர் வேலுமணி தலைமையில் இக்கட்டடம் திறப்பு விழா காண இருந்தது. இதற்கிடையில், பாஜ உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சிலர், பிஷப் தங்கும் விடுதியில் இயேசுவின் சிலைகள் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிஷப்பின் தங்கும் விடுதியில் கட்டடம் கட்ட மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால் இயேசுவின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது விதிமுறைக்கு மாறானது. எனவே சிலைகள் அமைக்க அனுமதிக்கக்கூடாது என்று கடந்த 27ம் தேதி சூலூர் தாசில்தார் ஜெயராஜிடம் முறையிட்டனர். அதை தொடர்ந்து தாசில்தார் கட்டட உரிமையாளர்களை அழைத்து விசாரித்தார். கட்டட அனுமதி விபரங்களை ஆய்வு செய்தார். அப்போது உள்ளூர் திட்டக் குழுமம் வழங்கிய அனுமதியில், கட்டடத்தில் உருவங்களை வைத்து  வழிபடவும், வழிபாட்டுத் தலமாகவும் அமைக்கக்கூடாது என்கிற நிபந்தனைகளை விதித்திருந்ததை சுட்டிக்காட்டிய தாசில்தார், உறுதிமொழிக்கு மாறாகவும், விதிமுறை மீறியும் சிலைகளை அமைத்துள்ளதை கண்டறிந்து சிலைகளை பிரதிஷ்டை செய்து திறக்கக்கூடாது.
தற்போது நிறுவப்பட்டுள்ள சிலைகளை வெளியே தெரியாத வகையில்  துணிகளால் மூடி மறைக்க வேண்டும், என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்ட உரிமையாளர்கள், சிலைகளை மூடி வைப்பதாகவும், ஜெபக்கூட்டம் நடத்தமாட்டோம் என்றும் உத்தரவாத கடிதம் எழுதி கொடுத்து சென்றனர். இதையடுத்து சிலைகளை சுற்றி திரை மறைவு ஏற்படுத்தப்பட்டது.

இதனால் கடந்த முதல் தேதி, பிஷப் தங்கும் விடுதி திறக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சிலைகளின் திரை மறைவு அகற்றப்பட்டு, சிலைகளை  பொலிவுடன் காட்சிக்கு வைத்தனர். திறப்பு விழா இன்று (9ம் தேதி) மதியம் 2 மணிக்கு நடைபெறுவதாகவும், அமைச்சர் வேலுமணி, கலெக்டர் ராசாமணி, எம்எல்ஏ கந்தசாமி, மேற்கு மண்டல ஐ.ஜி., உள்ளிட்டோர் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டது.   இதையறிந்த இந்து அமைப்பினர், பிஷப் தங்கும் விடுதியில் விதிமுறை மீறி அமைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற கோரியும், இது குறித்து நடவடிக்கை எடுக்காத அரசின் செயல்பாடுகள் குறித்தும் கடந்த சில நாட்களாக புகார் கூறி வந்தனர். ஆனால் தாலுகா நிர்வாகம் உரிய பதிலளிக்கவில்லை என தெரிகிறது.

 இந்த நிலையில், திறப்பு விழாவிற்கு துணை போகும் அரசு மற்றும் சூலூர் தாலுகா நிர்வாகத்தை கண்டித்து விஸ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு சூலூர் நகர தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில், கோவை மாவட்ட தலைவர் விஜயகுமார், பாஜ சூலூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன், இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி மாணிக்கம், மற்றும் இந்து முன்னணி, அகில பாரத மகா சபா ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் சுமார் இருபதிற்கும் மேற்பட்டோர் நேற்று மாலை முதல் சூலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு, அவர்களிடம் சூலூர் தாசில்தார் ஜெயராஜ் மற்றும் கருமத்தம்பட்டி டிஎஸ்பி பாஸ்கரன், சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் இன்று அதிகாலை 3 மணியளவில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் இந்து அமைப்பினரிடம், பிஷப் தங்கும் விடுதி திறப்பு விழாவிற்கு முன்பாக, இன்று சிலைகள் தொடர்பாக கிறிஸ்தவ அமைப்பினர் மற்றும் இந்து அமைப்பினரிடம் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும்.
 எனவே போராட்டத்தை கைவிடும்படி கூறினர். அதை ஏற்ற இந்து அமைப்பினர் போராட்டத்தை தற்காலிகமாக  கைவிட்டனர். பேச்சுவார்த்தையில் சிலைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தொடரும், என்று இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : BJP ,Jesus ,Bishop Hotel , Bishop's stay, Jesus statue, BJP, Hindu organization, sit-in struggle
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி...