×

குன்றத்தூர் ஒன்றியத்தில் புதிய நீர்த்தேக்க திட்ட பணிகள் தீவிரம்: பேரிடர் மேலாண்மை இயக்குனர் ஆய்வு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தில் ஒரத்தூர் ஏரி மற்றும் ஆரம்பாக்கம் ஏரி ஆகியவற்றை இணைத்து புதிய நீர்த்தேக்கம் உருவக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பேரிடர் மேலாண்மை இயக்குனர் சத்தியகோபால் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2015ம் ஆண்டு கனமழை வெள்ளத்தில் சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கி, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு பேரிடருக்கு என தனி நிர்வாகம் அமைத்து, அதற்கென நிதி ஒதுக்கி, பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு பேரிடர் மேலாண்மை நிதி ரூ.84 கோடியில் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.287 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு பணிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஆரம்பாக்கம் மற்றும் ஒரத்தூர் ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பணிகள் அனைத்தும் முடிவுறும் நிலையில், தற்போது தமிழக அரசு இதற்காக கூடுதலாக ரூ.60 கோடி ஒதுக்கியுள்ளது.

இதன் மூலம் இந்த பகுதியில் பெரிய நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டு 0.75 டிஎம்சி நீர் தேக்கப்பட்டு விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக மாற்றப்படும். வரும் காலங்களில் பேரிடரின் போது ஏற்படும் இன்னல்களை தவிர்க்க பல்வேறு பகுதிகளில் பல திட்டங்கள் தமிழக அரசு செய்து வருகிறது. இதேபோல், பல ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி பொதுமக்களை அச்சுறுத்தும் பகுதிகளில் மாற்று வழிகளும் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிக்கப்படும். இனிவரும் பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, பொதுப்பணித்துறை, உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags : Director of Disaster , Kundrathur
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...