×

வீட்டு உரிமையாளர் - வாடகைதாரர் ஒப்பந்தம் குறித்து மக்களின் சந்தேகத்தை தீர்க்க இலவச தொலைபேசி எண் விரைவில் அறிமுகம்

சென்னை: தமிழ்நாட்டில் சொத்தின் உரிமையாளர்கள்- வாடகைதாரர்களுக்கு இடையே ஏற்படும் ஒப்பந்தத்தில் இருதரப்புக்கும் உரிய உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் 2017 ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் குறித்து விளக்கம் அளித்து இணையதளம் மூலமாக விண்ணப்பித்தல் குறித்து கோட்டாட்சியர் / வாடகை அதிகாரிகளுக்கான செயல்முறை விளக்க பயிற்சி வகுப்பானது நேற்று முன்தினம் சென்னை, அண்ணா மேலாண்மை நிலையத்தில் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் www.tenancy.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்வது மற்றும் தொடர் நடவடிக்கை எடுப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன் பேசியதாவது: வாடகைதாரர் மற்றும் உரிமையாளர் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளின்படி வாடகையை முறைப்படுத்துவதும், வாடகைதாரர் மற்றும் உரிமையாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை சமன் செய்வதும், இந்த புதிய சட்டத்தின் நோக்கமாகும். சட்டம் 22.02.2019-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டபோது அந்த தேதிக்கு முன்னர் எழுதப்படாத ஒப்பந்தங்களை எழுத்து மூலமாக ஏற்படுத்தி பதிவு செய்வதற்கு 90 தினங்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது இந்த அவகாச காலமானது 120 தினங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 210 தினங்கள் வரை ஒப்பந்தங்களை எழுத்து மூலமாக பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எழுத்து வடிவிலான வாடகை ஒப்பந்தமானது சம்மந்தப்பட்ட சொத்து உரிமையாளர் அல்லது சொத்து மேலாளர் அல்லது வாடகைதாரரால் இந்த சட்டத்தின் கீழ் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றார்.

இந்த பயிற்சி வகுப்பில் தலா ஒரு சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர், துணை ஆட்சியர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயலாளர் கணேசன் மற்றும் தலைமை வருவாய் அலுவலர் சக்திமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சட்டம் மற்றும் இணையதளம் குறித்து பொதுமக்கள் தமக்குரிய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கு 180059901234 என்ற இலவச தொலைபேசி எண் ஒரு வார காலத்திற்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று துறை செயலாளர் கிருஷ்ணன் அறிவித்தார்.

Tags : Home Owner , Property owners
× RELATED வாடகை கேட்டதால் ஆத்திரம் வீட்டு...