அதிமுகவை முழுமையாக கைப்பற்ற வியூகம்? எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் அதிகரிப்பு

சென்னை: அதிமுகவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்துடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதால் அவருக்கும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் தோல்வி அதிமுகவுக்கு  மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போனது போன்றவற்றால் அதிமுகவில் சலசலப்பு நிலவுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற  உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் யாரை நிறுத்துவது என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக சார்பில் 3 பேர் தேர்வாக வாய்ப்பிருந்தாலும் பாமகவுக்கு ஒரு இடத்தை விட்டு கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மற்றொரு இடத்தை  பாஜக கேட்பதால் ஒரே ஒரு இடத்திற்கு மட்டுமே அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என தெரிகிறது. அந்த ஒரு இடத்திற்கு  ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, மைத்ரேயன், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், ஆகியோர் போட்டியிட விரும்புகின்றனர். எடப்பாடி ஆதரவாளர்களான தம்பிதுரை, கோகுல இந்திரா, அன்வர் ராஜா உள்ளிட்டோரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இரு தரப்பும்  தங்களது ஆதரவாளர்களை மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் மோதல் அதிகரித்துள்ளதாக அதிமுக  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காத ஆதங்கத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை முழுமையாக தனது  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர காய் நகர்த்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சில அமைச்சர்கள் மற்றும் தனது  ஆதரவாளர்களுடன் அவர் ரகசிய ஆலோசனையும் நடத்தியிருப்பதால் அவரது வியூகங்களை முறியடிக்கும் நடவடிக்கைகளை எடப்பாடி தரப்பு  மேற்கொண்டுள்ளது. இதனால் அதிமுகவில் விரைவில் பகிரங்கமாக மோதல் வெடிக்கும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Tags : AIADMK ,Edappadi ,conflict ,O.Panniriselvam , AIADMK, Strategy, Edapadi, O. Panneerselvam, conflict increase
× RELATED விளைச்சல் அதிகரிப்பால் விழுந்தது வெங்காயம் விலை