×

ஆவடி பஸ் நிறுத்தங்களில் போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய நிழற்குடைகள்

ஆவடி: ஆவடி பேருந்து நிறுத்த நிழற்குடைகள் விளம்பர போஸ்டர் ஒட்டும் இடமாக மாறியுள்ளதால் பொலிவிழந்து காணப்படுகிறது. ஆவடி தொகுதியில் ஆவடி, திருமுல்லைவாயல், கோவில்பதாகை, பட்டாபிராம், நெமிலிச்சேரி, சோரஞ்சேரி, திருநின்றவூர், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் சிடிஎச் சாலை, ஆவடி- பூந்தமல்லி சாலை, திருநின்றவூர்-பெரியபாளையம் சாலை, ஆவடி புதிய ராணுவ சாலை, பட்டாபிராம்-பூந்தமல்லி சாலை, திருநின்றவூர்- புதுசத்திரம் சாலை உள்ளிட்ட சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் தொகுதி எம்எல்ஏ நிதியில் இருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் அரசின் சாதனைகள் அடங்கிய வகையில் புகைப்படங்களுடன் மின் விளக்கு வசதியும் செய்யப்பட்டு இருந்தது. இதன் மூலம் இரவில் பயணிகளுக்கு வெளிச்சமும் கிடைத்தது. இந்த நிழற்குடையை பயன்படுத்தி பயணிகள் பஸ் வரும் வரை காத்து இருப்பார்கள். இவைகள் மழை, வெயில் காலங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பாக இருந்து வந்தது.

இவற்றை கடந்த 2 ஆண்டுக்கு மேலாக நிழற்குடைகளை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அதிகாரிகள் முறையாக பராமரிக்காமல் கைவிட்டதால் நிழற்குடை முழுவதும் அரசியல் கட்சிகள், வர்த்தக நிறுவனங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘பல இடங்களில் நிழற்குடை விளம்பர பலகை மீது மீது போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதால் மின் விளக்குகள் வெளிச்சம் தெரிவதில்லை. இதன் காரணமாக இரவில் நிழற்குடை முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் இருட்டில் பஸ்சுக்கு காத்திருக்கிறோம். இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள் பெண் பயணிகளிடம் சில்மிஷம், வழிப்பறி செய்வது உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. மேலும், பல நிழற்குடைகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளன. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் பலமுறை புகார் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் பயணிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். இதுகுறித்து, நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பேருந்து நிழற்குடைகளில் சேதமடைந்த இருக்கைகள், மேற்கூரைகள், மின் விளக்குகளை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Tags : bus stops ,Avadi , Avadi
× RELATED சென்னை பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் தகவல் பலகை!!