×

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் தேர்வில் தோல்வி அடைந்தால் உயிரை மாய்த்து கொள்ளக்கூடாது: மாணவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள்

சென்னை: “தமிழகத்தில் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்வில் தோல்வி அடைந்தால் மாணவர்கள் உயிரை மாய்த்து கொள்ள கூடாது” என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுகவிற்கு துணிவில்லாமல் போனதால் தான் தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்பினால் தற்கொலைப் படலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தகைய தற்கொலைகளுக்கு பாஜவும், அதிமுகவும் பொறுப்பேற்பதோடு, உரிய விலையை எதிர்காலத்தில் வழங்க வேண்டி வரும் என உறுதியாகக் கூற விரும்புகிறேன்.

வைகோ(மதிமுக பொதுச்செயலாளர்): நீட் தேர்வு தோல்வியால் திருப்பூரில் ரிது ஸ்ரீ, பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷ்யா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியதன் மூலம் எளிய குடும்பப் பின்னணியில் தேர்வு எழுதும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்புகளை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி இருக்கின்றது.
 
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தேர்வில் தேர்ச்சி பெறமுடியாமல் போனால் மனம் தளராமல் தொடர்ந்து வரும் தேர்வில் தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும். எக்காரணத்திற்காகவும், எச்சூழலிலும் தேர்வில் தேர்ச்சி பெறமுடியாமல் போனால் அதற்காக தாங்கள் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது.

அன்புமணி ராமதாஸ்(பாமக இளைஞரணி தலைவர்): திருப்பூர் மாணவி ரிது ஸ்ரீ, பட்டுக்கோட்டையை மாணவி வைஷியா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவர்களின் தற்கொலைக்கு காரணம் நீட் தேர்வு தான் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: இன்னும் எத்தனை உயிர்களை இந்த நீட் காவு வாங்கப் போகிறது. இன்னும் எத்தனை பேரின் கனவுகளைக் கருக்கிடப் போகிறது. பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளைக் கொடுக்கப்போகிறார்கள்.

ஜவாஹிருல்லா(மமக): நீட் தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்கள் யாரும் விரக்தியில் தற்கொலை எண்ணத்திற்குச் செல்லக் கூடாது.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: திருப்பூர் மாணவி ரிது ஸ்ரீ தூக்கிட்டும், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மாணவி வைசியா தீக்குளித்தும் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் தற்கொலை என்றாலும் உண்மையில் மத்திய அரசின் மருத்துவ கல்விக் கொள்கையால் நடத்தப்படும் படுகொலைகள் ஆகும்.

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய-மாநில அரசுகளை வற்புறுத்துவதோடு தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பை உறுதி செய்திட அனைத்து அரசியல் கட்சிகளும் மாணவர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும் ஒன்று திரண்டு போராட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணத்தொகையினை அரசு வழங்க வேண்டும்.

Tags : Nit's selection, immediate cancellation, failure in examination, life, political party leaders, request
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...