×
Saravana Stores

தஞ்சையில் பயங்கரம்: குடிநீர் பிரச்னையில் மோதல் சமூக ஆர்வலர் வெட்டிக்கொலை

தஞ்சை: தஞ்சை அருகே குடிநீர் பிரச்னையால் ஏற்பட்ட மோதலில் சமூக ஆர்வலர் வெட்டி கொல்லப்பட்டார். தஞ்சை அருகே விளார் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தபாபு (33). இவர் அக்கிராமத்தில் குடிநீர் தொட்டியை இயக்கி வருகிறார். சமூக  ஆர்வலரான இவர் ஊர் பொதுகாரியங்களை முன்னின்று செய்து வந்தார். விளார் கிராமத்துக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து, லாரி  மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. இந்த தண்ணீரை வீட்டுக்கு 2 குடம் என சமூக ஆர்வலர் ஆனந்தபாபு பகிர்ந்து கொடுத்து வந்தார்.

இதனிடையே, கடந்த சில நாட்களாக லாரி தண்ணீர் சப்ளையில் டிரைவர் குமார் (45) என்பவர் ஈடுபட்டார். மேலும், தண்ணீரை நேராக தனது வீட்டுக்கு கொண்டு வந்து தேவையான அளவு இறக்கி விட்டு மற்ற வீடுகளுக்கு கொடுத்து வந்தார்.  இதையறிந்த மக்கள், எங்களுக்கு ஒரு குடம் தண்ணீர்கூட கிடைக்கவில்லை. உங்கள் வீட்டில் பேரல் பேரலாக தண்ணீர் இறக்குகிறீர்களே என கேட்டுள்ளனர். சமூக ஆர்வலரான ஆனந்தபாபு இதை தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்குள் அடிதடி  ஏற்பட்டது. இதை ஊர்மக்கள் விலக்கி விட்டனர். எனினும், அவர்களுக்குள் பகை வளர்ந்தது. கடந்த 4ம் தேதி இரவு ஆனந்தபாபுவின் உறவினர் வீட்டு குழந்தைகள் தெருவில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது டிரைவர் குமார் வந்து  குழந்தைகளை அடித்துள்ளார். இதைதொடர்ந்து குமார் குடும்பத்துக்கும், ஆனந்தபாபு குடும்பத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கட்டை, அரிவாள், இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கி  கொண்டனர்.

இதில் ஆனந்தபாபு, அவரது தந்தை தர்மராஜ் (67) ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. எதிர் தரப்பில் டிரைவர் குமார், அவரது மகன்கள் ஏசி மெக்கானிக் கோகுல்நாத் (21), டிரைவர் கோபிநாத் (18), பிளஸ்-2 மாணவன் ஸ்ரீநாத் (16)  ஆகியோரும் படுகாயமடைந்தனர். இவர்களில் ஸ்ரீநாத் தவிர மற்ற 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் ஆனந்தபாபு, தர்மராஜ் ஆகியோருக்கும் தஞ்சை மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு நேற்று அதிகாலை ஆனந்தபாபு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக, குமாரின் கடைசி மகனை பிடித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : collision ,Tanjore , Murder
× RELATED ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தஞ்சை எம்.பி. சந்திப்பு