×

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு பெண் எம்.பி. பிரக்யா சிங் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை

போபால்: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு பெண் சாமியாரும், பாஜ எம்.பி.யுமான பிரக்யா சிங் தாகூர் நேற்று ஆஜராகவில்லை.
மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் பெண் சாமியார் பிரக்யா சிங். இவர் போபால் மக்களவை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆஜராக இந்த வாரம் விலக்கு அளிக்க வேண்டும் என பிரக்யா சார்பில் கோரிக்கை மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இந்த நிலையில் நேற்று பிரக்யாவை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் நேற்று அவர் ஆஜராகவில்லை.

இது தொடர்பாக பிரக்யாவின் வக்கீல் பிரசாந்த் மாகூ நீதிமன்றத்தில் கூறுகையில், பிரக்யாவுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவரால் போபாலில் இருந்து மும்பைக்கு பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என்றார். இதன் மூலம் பிரக்யா இந்த வாரத்தில் மட்டும் 2வது முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து அவருக்கு ஒரு நாள் விலக்கு அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இனி இதுபோன்று விலக்கு அளிக்க கோரினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதி எச்சரித்தார். இதனால் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் வழக்கில் மற்றொரு குற்றவாளியான சுதாகர் திவேதியும் காஷ்மீரில் மதம் சார்பான நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டி நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரினார். அவரையும் கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் நேற்று மட்டும் விலக்கு அளித்து உத்தரவிட்டது.

Tags : Pragya Singh ,Malegaon ,court , Malegaon, blast case, woman MP Prahya Singh
× RELATED மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு…...