×

தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் நண்பர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு பிரியாணி விருந்து படைத்தனர். இஸ்லாமிய மார்க்கத்தில் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு கடைபிடிப்பது. புனித ரமலான் மாதத்தின் போது இந்த கடமையை இஸ்லாமிய பெருமக்கள் நிறைவேற்றி வருகின்றனர். அதன்படி, கடந்த மாதம் 7ம் தேதி நோன்பு தொடங்கியது. “ஷவ்வால்” பிறை தென்பட்டதை தொடர்ந்து நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்தார். அதன்படி ரம்ஜான் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கட்டி அணைத்து ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஏழை எளிய மக்கள் மற்றும் நண்பர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினர். மேலும் சில இடங்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். ரம்ஜானை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பிராட்வே டான்பாஸ்கோ பள்ளி மைதானத்தில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பிறகு மமக தலைவர் ஜவாஹிருல்லா பெருநாள் உரை நிகழ்த்தினார்.

மேலும் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள மசூதியில் நடந்த சிறப்பு தொழுகையில் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் கலந்து கொண்டு ஆற்றிய பெருநாள் உரையில், ‘‘இஸ்லாமியர்களின் இணையற்ற பெருநாளாக விளங்குவது ரம்ஜான் பண்டிகை. அடுத்தவரின் பசியறிந்து பகிர்ந்துண்ணும் பாங்கை உலகிற்கு எடுத்துச் சொல்வது ரம்ஜான் பெருநாளின் தனிச்சிறப்பு. இதன்மூலம் மதங்களை கடந்த மனிதத்தை நேசிக்கும் உயரிய மாண்பை உலகிற்கு எடுத்துச் சொல்லும் நாள் இதுவாகும். முப்பது நாட்கள் நோன்பு என்பது உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்குவதோடு இந்த உலகையும் தூய்மையாக்கும் என்பது நிதர்சனமான உண்மை. சாதி, மதம், இனம் ஆகிய பேதங்களால் பிரிந்து கிடக்கும் சமூகத்தை ஒற்றுமை என்ற ஒற்றை குடையின் கீழ் கொண்டு வருவதற்கு அடித்தளமாக அமைவது ரம்ஜான் பெருநாள் ஆகும். தேசிய ஒருமைப்பாடும் மத நல்லிணக்கமும் இன்றைய சூழலில் மிக மிக அவசியமான ஒன்று. இதைக் கொண்டு வருவதே எதிர்கால நலனுக்கு நன்று” என்றார்.

இதேபோல, சென்னை தீவுத்திடலில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் திருவல்லிக்கேணி, பெரியமேடு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் தமிழகத்தில் நாகூர் உள்ளிட்ட நகரங்களிலும் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகையை நிறைவு செய்து விட்டு வெளியே வந்த இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு புத்தாடை, உணவு பொட்டலங்கள், பணம் உள்ளிட்டவற்றை தானமாக வழங்கினர். ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்த இடங்கள் மற்றும் பள்ளிவாசல்களின் வெளியே பாதுகாப்பு கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Ramzan ,festivals celebration ,Tamilnadu , Tamilnadu, Ramzan Festival, Kolakala Celebration
× RELATED மலையாள மொழி பேசும் சகோதர...