×

தலைமை ஆசிரியர் மாற்றத்துக்கு எதிர்ப்பு பள்ளிக்கு பூட்டு போட்ட கிராம மக்கள்: சாத்தான்குளம் அருகே பரபரப்பு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே பள்ளி தலைமை ஆசிரியர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பள்ளிக்கு பூட்டு போட்டனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தைச் சேர்ந்த துவக்கப்பள்ளி இயங்கிவருகிறது. தலைமை ஆசிரியராக எட்வின் பணி புரிந்து வந்தார். மேலும் இப்பள்ளியில் உதவி ஆசிரியர் மற்றும் 30க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு தாளாளராக இருந்த பழனியப்பபுரம் சேகரகுரு மாற்றப்பட்டார். புதிய சேகரகுருவாக அருமைதுரை என்பவர் பொறுப்பேற்றார். இதனால் இப்பள்ளிக்கு அருமைதுரை மனைவி ஜேனட் புதிய தலைமை ஆசிரியராக குருகாட்டூரிலிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய எட்வின் உடன்குடி அருகே உள்ள நேசபுரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி திறக்கப்பட்டதும் பழைய தலைமை ஆசிரியர் எட்வின் கையெழுத்து விட்டு உடன்குடி பள்ளிக்கு சென்று விட்டார். நேற்று புதியதாக பொறுப்பேற்க ஜேனட் வந்தார். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மாறுதலான தலைமை ஆசிரியரையே அப்பள்ளியில் பணியாற்றிட வலியுறுத்தினர். இதனால் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய தலைமை ஆசிரியரை பள்ளிக்குள் விடாமல் பள்ளியை பூட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை அறிந்த சாத்தான்குளம் எஸ்.ஐ சிலுவை அந்தோணி, ஆழ்வார்திருநகரி வட்டார கல்வி அலுவலர்கள் மீனாட்சி, ரோஸ்லின் ஆகியோர் வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. நேற்று முழுவதும் பள்ளி திறக்கப்படாததால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர். கிராம மக்களிடம் உடன்பாடு ஏற்படாததால் இன்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : locals ,head teacher change , Head teacher, lock to school, Sathankulam
× RELATED காஷ்மீரில் 3 உள்ளூர்வாசிகள் மர்ம சாவு குறித்து ராணுவம் விசாரணை