×

பெண்கள் சாமியாடி குறி சொன்னதால் 9 ஆண்டுக்கு முன் காவிரியில் வீசிய அம்மன் சிலையை தேடும் மக்கள்: இடைப்பாடி அருகே வினோதம்

இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள செட்டிமாங்குறிச்சி ஊராட்சி, ஒட்டப்பட்டியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அம்மன்  கோயில் புதுப்பிக்கப்பட்டது. அப்போது, அங்கிருந்த அம்மன் சிலையை எடுத்துச்சென்று, பூலாம்பட்டி காவிரி ஆற்றில் போட்டு விட்டு புதிய சிலையை  பிரதிஷ்டை செய்தனர். இதன்பிறகு ஆண்டுதோறும் வைகாசி மாதம் கோயில் விழாவை நடத்தி வருகின்றனர். இந்தாண்டு விழாவை நடத்துவதற்கான  ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் ஏரி வேலைக்கு சென்ற இடத்தில் சில பெண்கள் அருள்வந்து சாமி  ஆடியுள்ளனர். அப்போது, பழமையான அம்மன் சிலையை ஆற்றில் வீசியதால்தான், பருவமழை பொய்த்து ஊரில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆற்றில்  வீசப்பட்ட அம்மன் சிலையை மீட்டு வந்து, மீண்டும் கோயிலில் வைத்து பூஜை செய்தால் மட்டுமே மழை பெய்து ஊர் செழிக்கும் என அருள்வாக்கு  கூறியுள்ளனர்.

கடந்த 20ம் தேதி முதல் பூலாம்பட்டி கதவணை மின்நிலைய பராமரிப்பு பணிக்காக, காவிரியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் திறந்து  விடப்பட்டது. இதனால், தண்ணீர் குறைந்து கிடக்கும் ஆற்றில் சிலையை தேடினர். ஆனால் அம்மன் சிலை கிடைக்கவில்லை. நேற்று முன்தினம்  தேடிப்பார்த்தும் சிலை கிடைக்கவில்லை. நேற்று 3வது முறையாக தேடும் பணி நடைபெற்றது. இதற்காக மதியம் 1 மணியளவில் பூலாம்பட்டி  படித்துறையில் கிராம மக்கள் திரண்டனர். அருள்வாக்கு கூறிய பெண்களுடன் விசைப்படகு மற்றும் பரிசல்களில் காவிரி ஆற்றில் சென்று சிலை  கிடக்கும் இடத்தை எலுமிச்சம் பழம் உருட்டி தேடினர். அப்போது அருள்வாக்கு கூறிய பெண்கள் குறிப்பிட்ட இடத்தில் பாதாள கொக்கி போட்டு  துளாவியபோதும் சிலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளிக்கும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் ஆற்றுக்குள் இறங்கி தேடிப்பார்த்தும்  சிலை கிடைக்கவில்லை. மாலை 6.30 மணியளவில் அவர்களும் வெறும் கையுடன் கரை திரும்பினர். இன்று மீண்டும் சிலையை தேடும் பணியில்  ஈடுபடுகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘’அருள்வாக்கு கூறிய பெண்கள் கூறிய இடத்தில் காவிரி ஆற்றில் தேடிப்பார்த்தும் சிலை  கிடைக்கவில்லை. வரும் 7ம் தேதி முதல் கதவணை மின்நிலைய பராமரிப்பு பணிக்காக பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தண்ணீர் தேக்கி வைக்க  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்பாக சிலை கிடைத்தால்தான் உண்டு. சிலையை தேடி கண்டுபிடிக்கும் பணியில் முழுவீச்சில்  ஈடுபட்டுள்ளோம்’’ என்றனர்.

Tags : goddess idol , Women, Cauvery, Amman statue, people, buffer,
× RELATED உள்நாட்டு விமானத்தில் தங்க கட்டி கொண்டு வரலாமா?: ஐகோர்ட் கேள்வி