×

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக கவர்னர் பன்வாரிலால்: முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இரக்கம், பெருந்தன்மை, சகிப்புத்தன்மை போன்ற குணங்களை கடைபிடிக்க உறுதியேற்போம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி: அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள், பிறர்க்கு உதவிபுரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதியேற்போம், எங்களது நெஞ்சம் நிறைந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

கே.எஸ்.அழகிரி(தமிழக காங்கிரஸ் தலைவர்): இந்த இனிய ஈகைத் திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, அதற்கு முன்னர் ஏழைகளுக்கு ‘சதக்கத்துல் பித்ர்” என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமதாஸ்(பாமக நிறுவனர்): ரமலான் திருநாளும், அதற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் நோன்புகளும் இஸ்லாமியர்களின் வாழ்வில் இன்னுமொரு நிகழ்வு என்று கடந்து செல்லும் நிகழ்வுகள் அல்ல. இவை தான் இஸ்லாமிய மக்களை அவர்களின் வாழ்க்கை முறையில் புடம் போட்ட தங்கங்களாக மாற்றுகின்றன. மற்ற அனைத்து மதங்களையும் போலவே இஸ்லாமும் நன்மைகளை மட்டுமே போதிக்கிறது, அமைதியையும், ஈகையையும் வலியுறுத்துகிறது.

விஜயகாந்த்(தேமுதிக தலைவர்): ஏழ்மையை  அறிந்துகொள்ளவும், பசியின் கொடுமையை உணர்ந்துகொள்ளவும், உடல் நலத்தை  பேணிக்காத்து மனிதர்களை மேம்படுத்துவதுதான் இந்த புனித ரமலான் நோன்பின்  சிறப்பாகும். இந்த இனிய நாளில், அன்பு ஓங்கிட, அறம்  தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமிய  பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ(மதிமுக பொதுச் செயலாளர்): ரமலான் மாதத்தின் முப்பது நாள்களிலும் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, இறையை நினைத்திருந்து நோன்பு எனும் மாண்புடன் தவம் இருந்தமைக்குக் களித்திருந்து மகிழ்ந்திடும் நன்னாள் ரமலான் திருநாள். இந்த இனிய நன்னாளில், சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நிலைக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் உறுதி கொண்டு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜிகே வாசன்(தமாகா தலைவர்)ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு புனித ரமலான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி தலைவர்): அடிப்படைத் தேவைகள் அனைத்து மக்களுக்கும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற லட்சியம் ஓர் அழகிய கனவாகவே தொடர்ந்து வரும் சூழலில், ஈகை என்ற இனிய பண்பை எல்லோரும் கொண்டாடுவதும், இல்லாத மக்களுக்கு நம்மால் இயன்றவை வழங்குவதும் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் இதயங்கனிந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.  

எர்ணாவூர் நாராயணன்(சமத்துவ மக்கள் கழக தலைவர்): ஈகை திருநாளான ரமலான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் என் அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: புனித ரமலான் நன்னாளில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் இல்லாமல் அன்பும் அமைதியும் பெருகி எங்கும் மகிழ்ச்சி நிறைந்திட வாழ்த்துகிறேன்.
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன்:  மானிட நேய நெறி என்பது மதம், சாதி, இனம், நாடு கடந்த மேன்மை நெறி, நன்னெறி, பொன்னெறி என்றும் மனித சமுதாயத்தை வாழ்விக்கும் திருநெறி. அத்தகைய நெறி தழைக்க எல்லாரும் உழைப்போம் சாமானியரை உயர்த்துவோம். சகமாந்தரை உன்னத வாழ்வுக்கு உயரப் பாடுபடுவோம்.

சமக தலைவர் சரத்குமார்: ஈகையின் சிறப்பை வெளிக்காட்டும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்கு அளித்து அனைவரும் இன்புற்று வாழ்ந்திட இறைவனை வேண்டி, மேற்கொள்ளப்படும் ரமலான் மாத நோன்பு காட்டும் அறநெறிகள், அனைத்து மதத்தினரும் பின்பற்ற வேண்டிய அறநெறிகளாகும்.

இவர்களை தொடர்ந்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேமநாராயணன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : Chief Minister ,leaders ,festival ,Ramzan , Ramjaan Festival, Chief Minister, Leaders, Greetings
× RELATED அமித்ஷா பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து