×

மெரினாவில் அதிகாலையில் விபரீதம் பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர் பலி: ஒருவர் சீரியஸ்; 15 பேர் மீது வழக்கு

சென்னை: மெரினாவில் பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக் ரேசில் ஈடுபடும் நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை முழுவதும் பைக் ரேசில் ஈடுபடும் நபர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து பைக்குகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை பட்டாளத்தை சேர்ந்த சாந்தகுமார் (19) மற்றும் பாலாஜி உட்பட 8 பேர் நேற்று காலை 6 மணி அளவில் மெரினா காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி 4 பைக்குகளில் பைக் ரேசில் ஈடுபட்டனர். அப்போது, அதிக சத்தத்துடன் சாலையின் குறுக்கே வளைந்து நெலிந்து பைக்குகளை ஓட்டினர். காமராஜர் சாலையில் சுபாஷ் சந்திர போஸ் சிலை சென்றபோது, எதிரே வந்த மாநகர பேருந்து மீது பாலாஜி ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த சாந்தகுமார் தூக்கி விசப்பட்டு சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். பைக்கை ஓட்டி வந்த பாலாஜி உடல் முழுவதும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். இதை பார்த்ததும் பைக் ரேசில் ஈடுபட்ட நபர்கள் மாயமாகிவிட்டனர்.

மெரினாவில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் உயிருக்கு போராடிய பாலாஜியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த அண்ணாசதுக்கம் போக்குவ ரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த சாந்தகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மெரினா காமராஜர் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், உடன் பைக் ரேசில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அதேபோல், அபிராமபுரம் மற்றும் கோட்டூர்புரம் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலை நோக்கி 15க்கும் மேற்பட்டோர் பைக் ரேசில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் கோட்டூர்புரம் சாலையின் இடையே தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மின்னல் வேகத்தில் 5 பைக்கில் வந்த 15 பேரை வழிமறித்து பிடித்தனர். அவர்கள் 15 பேர் மீதும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் போக்குவரத்து விதிகளை மீறியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பைக் ரேசுக்கு பயன்படுத்திய 5 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசாரை கேலி செய்த வாலிபர்கள்:
சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை 50க்கும் மேற்பட்ட பைக்குகளில் 100க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தங்களது பைக்குகளில் ஹாரன் அடித்தப்படியும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை கேலி செய்த படியும், பைக் ரேசில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் மெரினா காந்தி சிலை அருகே அதாவது டிஜிபி அலுவலகம் முன்பு ஒன்று கூடினர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது பைக்கில் வந்த வாலிபர்கள் போலீசாரை பார்த்து கேலி செய்தபடி சுற்றி சுற்றி பைக்கில் வலம் வந்தனர். குறைந்த எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்ததால் பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் அதிகாலை கடற்கரையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

சிசிடிவி பதிவு மூலம் விசாரணை:
ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து மெரினா கடற்கரை பகுதியில் சிட்டி போலீஸ் ஆக்ட் 41ன் படி 4 பேருக்கு மேல் ஒன்றாக கூட போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால் நேற்று அதிகாலை 50க்கும் மேற்பட்ட பைக்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஒன்று கூடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து ரகளையில் ஈடுபட்ட நபர்களை சிசிடிவி பதிவு மூலம் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : serial killer ,bike race ,Marina , Marina, early morning disaster, bike race, young guy, one guy
× RELATED மெரினாவில் ₹7 கோடி செலவில் பாய்மர படகு...