சென்னை: சென்னையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தொழில், பணிகள் நிமித்தமாக தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வருவார்கள். சிலர் பார்சல் வாங்கி வருவார்கள். கடந்த சில ஆண்டுகளாக வீடு மற்றும் அலுவலகங்களில் உட்கார்ந்தபடியே செல்பேன் ஆப்பில் ஆர்டர் செய்து உணவு வரவழைத்து சாப்பிடுகின்றனர். ஆன்லைனில் ஆர்டர் எடுத்து உணவு சப்ளை செய்யும் வேலைக்கு அதிக சம்பளம் கிடைப்பதால் இந்த வேலைக்கு படித்த இளைஞர்கள் ஆர்வமுடன் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் உணவுப் பொருட்களை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதால், மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள்.
ஒருசிலர் சாலைகளில் உள்ள சிக்னல் உள்ளிட்ட எந்த விதிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது சாலைவிதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாததால் ஒரே நாளில் 616 உணவு சப்ளை செய்யும் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்று போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.