×

பிரதமர் மோடியின் மனதை கவர்ந்த சமூக சேவகர்... மண் குடிசையில் வாழ்பவருக்கு மத்திய அமைச்சர் பதவி

பாலசோர்: பிரதமர் மோடியின் மனதை கவர்ந்த ஒடிசாவின் சமூக சேவகர், இன்று அமைச்சராக உயர்ந்துள்ளார். இதனால், ஒடிசா மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒடிசா மாநிலம் பாலசோர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஓர் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீ பிரதாப் சந்திர சாரங்கி (64). திருமணம் செய்துகொள்ளாத இவரின் தாய் கடந்தாண்டுதான் இறந்தார். மற்ற குடும்ப உறவுகள் ஏதும் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. மண் குடிசையில் சாதாரண வாழ்க்கை நடத்தி வரும் இவர், மது, ஊழல், போலீஸ் அத்துமீறலுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு சமூக விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருவார். இதனால், பாலசோர், மயூர்பன்ஜி மாவட்டங்களில் அவரது சேவை பரவியது.

மக்களின் நன்மதிப்பை பெற்ற அவரை, ஒடிசா மக்கள் ‘அண்ணன்’ ஸ்ரீபிரதாப் சந்திர சாரங்கி என்று அழைக்கின்றனர். ஏற்கனவே 2 முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட இவர், பிரதமர் மோடியின் கவனத்தை பெற்றதால், இந்த மக்களவை தேர்தலில் பாஜ கட்சியின் சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிஜூ ஜனதா தளம் வேட்பாளர் ரவீந்திர குமார் ஜனாவை 12,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவரின் எளிமையான வாழ்க்கையை பார்த்து அப்பகுதி மக்கள் இவரை ‘ஒடிசாவின் மோடி’ என்றும் அழைக்கின்றனர். எங்கும் சென்றாலும் சைக்கிள் பயணம்தான். தேர்தல் பிரசாரத்தில் கூட சைக்கிள், ஆட்டோவில் சென்றுதான் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளார். இளம் வயதிலிருந்தே ஆன்மிகத்தின் மீது ஆர்வம் கொண்ட பிரதாப் சந்திர சாரங்கி, ஒரு மடத்தில் சந்நியாசியாக சேர விரும்பியபோது, அவரை குறித்து விசாரித்த மடத்தை சேர்ந்தவர்கள், அவரது தாய் விதவை என்பதால், அவரை சென்று கவனிக்க சொல்லி விட்டனர். இதனால், சந்நியாசி வாழ்க்கையை, மக்களுடன் பகிர்ந்து கொண்டு, இன்று ஒரு தொகுதியின் எம்பி என்ற நிலையில் இருந்து அமைச்சராக உள்ளார்.

இவரது வெற்றி மற்றும் எளிய வாழ்க்கையை பலரும் பாராட்டி வருகின்றனர். முன்னதாக நேற்று, குடியரசுத் தலைவர் மாளிகையில் 2வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார். அவருடன் 24 பேர் கேபினட் அமைச்சர்களாவும் 9 பேர் தனிப்பொறுப்பு அந்தஸ்திலான அமைச்சர்களாகவும், 24 பேர் இணையமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர். அதில், பிரதாப் சந்திர சாரங்கிக்கு இணை அமைச்சர் பதவி வழங்கி பிரதமர் மோடி அவரை கவுரவித்துள்ளார். இவருக்கான அமைச்சர் இலாகா இன்னும் ஒதுக்கப்படவில்லை. எளிமையான வாழ்க்கை வாழும் இவர் இன்றும் தனக்கு சொந்தமான மண்குடிசையில் தான் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Narendra Modi ,social worker , Social Worker, Prime Minister Modi, Orissa, Sri Pratap Chandra Singh
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...