சென்னை: புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று அடையாறு புற்றுநோய் சிகிச்சை மைய தலைவர் சாந்தா கூறினார். உலக புகையிலை ஒழிப்பு நாள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி இந்த ஆண்டு ‘‘நுரையீரல் பாதிப்பை கட்டுப்படுத்துவோம்’’ என்ற தலைப்பில் புகையிலை பயன்பாட்டை குறைப்பதற்கான விழிப்புணர்வு மேற்கொள்ள பணிகளில் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் ஈடுபட உள்ளது.
இதுதொடர்பாக அடையாறு புற்றுநோய் சிகிச்சை மைய தலைவர் சாந்தா, நிர்வாகிகள் கூறியதாவது:
புற்றுநோய் பாதிப்பில் 40 சதவீதம் புகையிலை பயன்பாட்டால் ஏற்படுகிறது. 2010, 2016ம் ஆண்டுகளில் எடுத்த சர்வே அடிப்படையில் தமிழகத்தில் 10 சதவீதம் பேருக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது. புகையிலை பயன்பாட்டை குறைப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆனால், புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கு அரசு ஒத்துழைப்பு தருவதில்லை. தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்கும் கடைகளில் 14 சதவீதம் பள்ளிகளுக்கு அருகே அமைந்துள்ளது.
மாநில புகையிலை கட்டுப்பாட்டு மைய கூட்டம் நடத்தி ஓராண்டுக்கு மேல் ஆகிறது. தமிழக அரசிடம் 3 கோரிக்கைளை வைத்தோம். அரசியல் சட்டப்பிரிவு 5.3ஐ கடுமையாக அமல்படுத்த வேண்டும். கார்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி திட்டத்தின்கீழ் வரி கணக்கு காட்ட தடை விதிக்க வேண்டும். மதுபானத்தை போல், அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு மட்டும் லைசென்ஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் அரசியல் சட்டப்பிரிவு 5.3ஐ மட்டுமே தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. அரசியல் சட்டப்பிரிவு 5.3ன்படி, புகையிலை, புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அரசிடமோ அரசு சார்ந்த நிறுவனங்களிடமோ எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தக்கூடாது.
அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் முன்அனுமதி பெற வேண்டும். அந்த பேச்சுவார்த்தையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். அதேபோல், மெல்லும் தன்மை கொண்ட புகையிலை பயன்படுத்த சட்டப்படி தமிழகத்தில் அனுமதியில்லை. ஆனால் எல்லா கடைகளிலும் மெல்லும் தன்மை கொண்ட புகையிலை எளிதில் கிடைக்கிறது. ஏற்கனவே உள்ள சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவதில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்றார். இவ்வாறு அவர்கள் கூறினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறுகையில், ‘‘புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டுமாவது தமிழ்நாடு முழுவதும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வேண்டாம் என்று வணிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். என்றார்.