×

தமிழக மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவர்களுக்கு வேலை : தமிழ்த்தேசிய பேரியக்கம் குற்றச்சாட்டு

தஞ்சை: தமிழ்நாடு மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவர்களுக்கு வேலை கொடுக்கும் செயல் அதிமுக ஆட்சியின் இனத்துரோகம் என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தமிழ்த் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தொடர்ந்து வெளி மாநிலத்தவர்கள் கூட்டம் கூட்டமாக குடியேறி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு இந்திக்காரர்களுக்கும், வெளி மாநிலத்தவர்களுக்கும் 100 முதல் 95 சதவீதம் வேலை தருகிறார்கள். இதனால் தமிழர்கள் தங்கள் தாயகத்திலேயே வாழ்வுரிமை இழந்து அகதியாகும் அபாயம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 300 உதவி பொறியாளர் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 39 பேர் ஆந்திரா, கேரளா, உத்தர பிரதேசம், பீகார், கர்நாடகம், ராஜஸ்தான், டெல்லி, சட்டீஸ்கர் ஆகிய வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள்.

பணி அமர்த்தல் ஆணையில் அவர்களது முகவரியும் உள்ளது. இதில் 25 பேர் ஆந்திர தெலுங்கர்கள். இவர்களை வடசென்னை, குந்தா (நீலகிரி), காடம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியில் அமர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.50 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வானவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அசோக்குமார் தேர்வானவர்களில் தமிழ் தெரியாதவர்கள் இருப்பின் அவர்கள் உடனடியாக தமிழ் தேர்வுக்கு தயாராக வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் என தெரிந்தே இவர்களை பணியில் அமர்த்தியுள்ளது தமிழக அரசு. இது, தமிழ் மக்களுக்கு இழைக்கும் இனத்துரோகமாகும். தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளர் பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ள 39 பேரை உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Outsiders , Work for Outsiders , Tamil Nadu Electricity,Tanishive Dignity Accusation
× RELATED பாஜ தலைவர்களை வெளியாட்கள் எனக் கூறி...