×

கல்வித்துறையில் தொடரும் பழிவாங்கும் நிலை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 20 சதவீதம் குறைப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர்களாக பதவி உயர்த்தும் 70 சதவீத வாய்ப்பை 50 சதவீதமாக அரசு அதிரடியாக குறைத்துள்ளது. இதனால், தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி  அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் தற்போது பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் வட்டார கல்வி அலுவலர்களாக பதவி உயர்த்தப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தொடக்க கல்வித்துறை செய்து  வருகிறது. இந்நிலையில், பதவி உயர்வு வழங்கப்பட உள்ள மொத்த எண்ணிக்கையை குறைத்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்யவும், மேற்பார்வையிடவும் ஒன்றிய அளவில் உதவித் தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. நடுநிலைப் பள்ளிகளில்  தலைமை ஆசிரியர்களாக பணியாற்றுவோர் பதவி உயர்வு மூலம் மேற்கண்ட பதவியில் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு அரசு வெளியிட்ட உத்தரவின் பேரில், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை உதவி தொடக்க  கல்வி அலுவலர்களாக உயர்த்தப்படும் போது, 50 சதவீதம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மீதம் 50 சதவீதத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர் கடந்த 2008ம் ஆண்டில், 70 சதவீதம் பணிமாறுதல் மூலமும், 30 சதவீதம் நேரடி நியமனம் மூலமும் நிரப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடம், வட்டாரக் கல்வி அலுவலர் என மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. இந்த பணியிடங்கள் அனைத்தும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்து  பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் என்று 2019ம் ஆண்டு திருத்தம் செய்து ஆணை வெளியிடப்பட்டது. இதன்படி வட்டார கல்வி அலுவலராக நியமிக்கப்படுவோர் பள்ளிகளை ஆய்வு செய்வது, மேற்பார்வையிடுவது, புதிய பள்ளிகள் தொடங்க  கருத்துரு பரிந்துரை செய்வது உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட பணிகள் ஒதுக்கப்பட்டது. இதற்கிடையே, காலி ஏற்படும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான இடங்களில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 30 சதவீதம் நிரப்பப்படுவதை மாற்றி 50 சதவீதம் நேரடியாக நியமிக்க அனுமதி கேட்டு தொடக்க கல்வி இயக்குநர் அரசுக்கு  கடிதம் எழுதினார்.

தொடக்க கல்வி இயக்குநரின் கடிதத்தை பரிசீலித்த அரசு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 30 சதவீதம் நேரடியாக நிரப்பப்பட வேண்டிய அரசாணையை ரத்து செய்துவிட்டு, 50 சதவீதம் நியமனம் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் இதுவரை 70 சதவீதத்தின் அடிப்படையில் வட்டார கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்று வந்தனர். நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பாலான ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக  வாக்களித்துவிட்டதால், 70 சதவீதம் என்பது 50 சதவீதமாக குறைத்து அரசு தங்களை பழிவாங்குவதாகவும், தங்களுக்கு தகுதி இல்லை என்று அரசு கருதுகிறதா என்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.


Tags : chief editor promotion ,Middle School , Revenge , education sector, Middle School, Chief Editorial
× RELATED உலக புவி தினத்தையொட்டி கொப்பம்பட்டி...